மரண அறிவித்தல் – திரு. இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்கள்-

ramalingam sinnathampi 02.07.2016யாழ் நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை மற்றும் திருநாவற்குளத்தை வாழ்விடங்களாகவும் கொண்டவரும், எமது கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் பாரூக் அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் இன்று (02.07.2016) காலமானார்.

அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தார், நண்பர்களுடன் எங்களின் ஆழ்ந்த துயரையும் பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புகட்கு
யோகன் – 0775155393
சண்முகலிங்கம் – 0771654136

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்-

Untitled-2_copysdasdஇலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இநத நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இந்திரஜித் குமாரசுவாமிக்கான உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம் கடந்த 30ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அந்தப் பதவி குறித்து ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். 1950ம் ஏப்ரல் ஆண்டு பிறந்த கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் பொதுநலவாய அமைப்பின் பொருளாதார அலுவல்கள் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார். 1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

உடையார்கட்டு விபத்தில் பாலகன் மரணம்-

accidentமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டுபகுதியில் வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பச்சிளம் பாலகன் உயிரிழந்துள்ளார். முன்பள்ளியிலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு வந்த சிறுவன் முச்சக்கர வண்டியை விட்டு இறங்கி வீடு சென்றுள்ளார். இதன்போது, தனது பொருளொன்றை முச்சக்கரவண்டியில் தவறவிட்டு அதை எடுப்பதற்காக மீண்டும் முச்சக்கரவண்டியை நோக்கி சென்றபோது எதிரே வந்த வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சிறுவன் உடையார்கட்டை பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் தர்சன் (வயது 3) என்பவராவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகாமில் வாழ்ந்த மக்களுக்கு கீரிமலையில் மாற்றுக்காணி-

1467441563_download (4)யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் கடந்த 28 வருடங்களாக முகாம்களில் வாழ்ந்துவந்த மக்களுக்கு முதற்கட்டமாக காணிகள் வழங்கப்பட்டன. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் குடும்பங்கள் பெருக்கத்தினால் முகாம்களில் உள்ள பல குடும்பங்களுக்கு சொந்த நிலம் இல்லாத நிலையில் மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கும் நடவடிக்கைகள் மாவிட்டபுரம் – கீரிமலை பகுதியில் நேற்றையதினம் தொடங்கப்பட்டுள்ளன. குறித்த மக்களை குடியேற்ற மாற்று காணிகள் 40 ஏக்கர் பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்டன. முதற்கட்டமாக மாவிட்டபுரம்- கீரிமலை பகுதியில் சீமேந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணியில் தலா இரண்டு பரப்பு காணி வழங்கப்பட்டு 129 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செய்லர் சிறிமோகன் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் வழங்கிவைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் கவனக்குறைவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-

1467456131_download (8)மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இன்றுகாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தமது கடமைகளை பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளாமைக்கு எதிராகவே பொது மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்பமாகி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று நிறைவடைந்துள்ளது. பட்டிருப்புமத்திய மகா வித்தியாலத்தில் கல்வி கற்ற 07 வயதுடைய மேகநாதன் மோகவர்மன் என்ற மாணவன் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 15ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். குறித்த மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் கவனக்குறைபாடே காரணம் எனக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மரணமடைந்த மாணவனின் தந்தை கருத்து தெரிவிக்கையில், தனது மகன் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு பல மணித்தியாலங்கள் சென்ற நிலையிலும் எந்தவித சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. பின்னர் தனது மகன் வயிற்று வலி காரணமாக அவதியுற்ற போதும் வைத்தியர்கள் அவ்விடத்திற்கு காலந்தாழ்த்தியே வருகை தந்ததாகவும், வைத்தியர்கள் பெரிய வைத்தியருடன் தொலைபேசியில் உரையாடியவாறே சிகிச்சையளித்ததாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் வைத்தியர்களின் அசமந்தபோக்கு காரணமாக தனது மகன் மரணமடைந்துள்ளதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.