மன்னாரில் 300 பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்-

dfdfவடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, ‘செமட்ட செவன’ எனும் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தின் 300 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கிவைத்தார். இந்நிகழ்வானது, மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் தலைமையில், மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 இலட்சம் ரூபாய் வரையில், வீடமைப்புக்கான கடன் வழங்கப்பட்டது. மேலும் தெரிவுசெய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு, சீமெந்து பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியூ முஹமது பஸ்மி, ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் இளைஞர் அணி செயலாளர் டி.பெணாண்டாஸ் கூஞ்ஞ, பிரதேச செயலாளர்கள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

காரைநகர் தொழிற்பயிற்சி நிலைய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்-

dgfஇலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி நெறிகளைப் பயில விரும்புவோர், தமது விண்ணப்பங்களை ‘பொறுப்பதிகாரி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், வலந்தலைச் சந்தி, காரைநகர்’ என்ற முகவரிக்கு தமது சுயவிபர விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு நிலையப் பொறுப்பதிகாரி வே.ஸ்ரீகுகன் அறிவித்துள்ளார். இப்பயிற்சியில் சித்தியடைந்தோருக்கு, தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்நிலையத்திற்கான இலவச அரச பஸ் சேவை 782 காரைநகர் வழித்தடமூடாக நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

புலிகள் அமைப்பின் ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை-

thaya georgeகைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த, புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை, அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த அவர், பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என, நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர். இதனையடுத்து அவரை விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை அவ்வமைப்பின் ஊடகச்செயலாளர் தயா மாஸ்டர் தொடர்பிலான வழக்கு டிசம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரவிப்பாஞ்சான் காணியை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை-

paraviகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணியை மீள கையளிக்குமாறு, காணி உரிமையாளர்களான பிரதேச மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பகுதிக்கு இன்றுகாலை சென்ற காணி உரிமையாளர்கள், அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையும் குறித்த பிரதேசத்திற்குச் சென்ற மக்கள் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்ததோடு, இராணுவத்தினரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்து தமக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இவ் ஒருவார காலப்பகுதியில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், மக்கள் இன்றுகாலை மீண்டும் பரவிப்பாஞ்சான் பகுதிக்குச் சென்று இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும், மக்களது கோரிக்கை கடிதத்தை பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில், காணி விவகாரத்தில் இராணுவத்தினரும் அதிகாரிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடி வருவதாகவும், தாம் வாடகை வீடுகளிலும் உறவினர்களது வீடுகளிலும் தங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 18ஆம் திகதி கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணியை விடுவிக்குமாறு கோரவுள்ளதாகவும், பொதுமக்கள் காணிகளை விட்டு இராணுவம் வெளியேற்றப்பட்டு தம்மை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டுமெனவும் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.