குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கப்பட வேண்டும்-அமைச்சர் மங்கள சமரவீர-

mangalaஇராணுவத்தைச் சேர்ந்த சிலரோ, அரசாங்கத்திலுள்ள சிலரோ நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டிக்கப்பட வேண்டும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரேமவதி மனம்பேரி சம்பவம் தொடர்பில் இவ்வாறாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் கலந்து கொண்ட பின்னர், இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அப்பாவி மக்களைக் கொலை செய்யும் மோசமான மனநிலை கொண்ட இராணுவம் எம் வசம் இல்லை எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர், எவரேனும் குற்றம் செய்திருப்பின் அது உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையிலேயே எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும், இதன்போது அவர் விளக்கியுள்ளார். அவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் ஆணைக்குழுவை அமைக்கவுள்ளோம். இதன்போது உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணாமல் போனோர் உள்ளனர். அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டாகும்போது நிறைவு செய்யப்படும். ராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தை பரப்பியுள்ளது. இதில் நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.