முன்னாள் போராளிகள் புலனாய்வுப் பிரிவினரால் கைது-

arrest (30)முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்சா – வித்திரி தம்பதியினர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9.00 மணியளவில் மூன்று வாகனங்களில் சென்றிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினராலேயே குறித்த குடும்பம் சுற்றிவளைக்கப்பட்டு இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டபோது குறித்த இடத்திற்கு பெண் பொலிசார் யாரும் வரவில்லை என்றும் இவர்கள் இருவரும் முன்னாள் போராளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கைதுகளால் முன்னாள் போராளிகளும் பொதுமக்களும் பெரிதும் அச்சமடைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவி-

srilanka indiaஇலங்கையில் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது, தொடர்பான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றுள்ளது. இக் கூட்டத்தில், இந்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, இலங்கை சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், இரு நாட்டு ரயில்வே துறை அதிகாரிகளும், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் தற்போதுள்ள ரயில்வே வழித்தடங்களை மேம்படுத்துவது, சிக்னல்கள், தொலைத் தொடர்பு வசதிகள் ஆகியவற்றை நவீனப்படுத்துவது உட்பட சில முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். இதன்போது, இலங்கையில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்தியா நிதியுதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாலாயிரம் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்-

electricity boardஇலங்கை மின்சார சபையுடன் இணைந்த மற்றும் ஆட்பலம், குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதிமுதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.