பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-

sithadthanபொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலையே அமைக்கப்பட வேண்டும். அதுவே பொருத்தமான இடமாகவும் விளங்குகின்றது. எமது மக்களின் விருப்பமாக இருக்கின்றதுடன் அதனாலேயே மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும். இதனை விடுத்து சிலர் எங்கள் மக்கள்மீது அக்கறை கொள்வது போன்று நடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மத்திய நிலையம் அமைவது தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற இழுபறி நிலைமை தொடர்பாகவே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது வரவேற்றகத்தக்கது. அது ஓமந்தையிலேயே அமைய வேண்டுமென்பதே எமது விருப்பமாகவும் எமது மக்களுக்கும் நல்லதாகவும் அமையும். அதுவே எங்களில் பலரதும் நிலைப்பாடாகவும் இருக்கின்ற நிலையில் இதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் சிலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும் இதனை மாற்றுவதற்கு இடமளிக்காது ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு நாங்கள் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டுமெனக் கூறுகின்ற போது இதனை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முற்படுகின்ற தரப்பினர்கள் ஓமந்தையில் அமையாவிட்டால் இத் திட்டம் கைவிடப்படும் என்றும் மிரட்டி அடிபணிய வைக்கப்பார்க்கின்றனர். ஆனால் நாம் எத்தகைய மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை. எமது மக்களிற்கு எது நல்லதோ அதனையே நாமும் செய்வோம். அந்த வகையில் இந்தப் பொருளாதார நிலையமானது ஓமந்தையில் அமைவதே நல்லது சிறந்தது என்று எமது மக்கள் விரும்புகின்ற அல்லது கோருகின்ற போது அந்த மக்கள் பிரதிநிதிகளான நாமும் அவர்களது விருப்பத்திற்கமைய அதனையே மேற்கொள்வோம்.
இதேவேளை இன்றைக்கு இந்த விடயத்தை இவ்வளவு பெரிதாக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதையும் நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டுமென்பதனை முதலமைச்சர் தெளிவாகக் கூறிவிட்டார். அதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால் கட்சித் தலைவரும் முதல்வருமாகப் பேசி இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நடைபெறாததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மக்களும் முதலமைச்சரும் கூறியது போன்று ஓமந்தையிலேயே அமைவது தான் நல்லது. அது தான் எமது மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
அதாவது ஓமந்தையில் அமைய வேண்டுமென நான் கூறுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மக்களும் முதலமைச்சரும் தீர்மானித்திருக்கின்றனர். தாண்டிக்குளம் சிறிய பிரதேசம். வவுனியா மாநகர சபையாக வரவுள்ள நிலையில் அந்த எல்லைக்குள் பொருளாதார மத்திய நிலையம் வந்தால் அது பெரிய இடைஞ்சலாக இருக்கும் இவ்வாறு பலவற்றையும் குறிப்பிட்டுக் கொண்டே செல்லலாம். இதேவேளை அதனை விட மிக முக்கிய காரணம் ஜோன்ஸடன், ரிசாட், மஸ்தானும் தீவிரமாக பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் வைக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் கூறுவது எங்களுடைய மக்களுக்காக அல்ல. அவ்வாறு எங்களுடைய மக்களுடைய நன்மைக்காக அவர்கள் அவ்வாறு கூறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே அந்த அடிப்படையில் நாங்கள் எமது மக்களின் நன்மைகளுக்காவே ஓமந்தையில் அமைக்க வேண்டுமெனக் கோருகின்றொம்.
நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது கூட்டமைப்பு கடந்த சில தினங்களிற்கு முன்னர் இது தொடர்பில் ஆராயந்திருந்தது. அதன்போது வாக்கெடுப்பு நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உண்மையிலேயே வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை. அதாவது முதலமைச்சர் முடிவெடுத்திருக்கலாம், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையும் அல்லது கட்சித் தலைவரும் கலந்து முடிவெடுத்திருக்க வேண்டும். ஆகவே இனியும் காலம் தாழ்த்தாது நாம் கூறியது போன்று எமது மக்கள் விரும்புகின்றதன் அடிப்படையில் நல்லதோர் முடிவை எடுக்க வேண்டும். அது ஓமந்தையிலாக அமைய வேண்டும்.
இதேவேளை எங்களுக்கு கிடைக்கின்ற இவ்வாறான சந்தர்ப்பங்களை நாங்கள் தவற விடக்கூடாது. குறிப்பாக இரணைமடுத் திட்டம் எங்களிடமிருந்து கைநழுவிப் போயிருக்கின்றது. ஆகையால் அதேபோன்று இதனையும் விட முடியாது. இதனை நாங்கள் சரியாகவும் அதே நேரம் கவனமாகவும் கையாள வேண்டும். அதற்கமைய நாம் எமது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மக்களுக்காக மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.
அதே வேளை இந்த நிலையத்தை தாண்டிக்குளம் அல்லாது வேறு இடம்கொண்டு சென்றால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு இடத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் பிளக்மெயில் பண்ணி எங்களுக்கு ஒரு திட்டம் வருகின்றதென்றால் அதனை நாங்கள் சரியாக கையாள வேண்டும். ஆகையால் அதில் தவறிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. அதனால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தாங்கள் கூறுகின்ற இடத்தில் அமைக்கா விட்டால் திட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகின்ற அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய முடியாது. எமது மக்களின் விருப்பமும் எமது மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் திட்டங்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் நாம் மேற்கொள்வோம். அத்தகையதொரு நிலைப்பாட்டையே இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதிலும் நாம் எடுத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.