பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக ஊடகக்குழு-

policeபொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக ஊடக குழுவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் தலைவர்களாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான அஜித் ரோஹன மற்றும் பிரியந்த ஜெயக்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் 2ம் திகதி பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் மீண்டும் குண்டு வெடிப்பு-

wertrtrபங்களாதேஷில் ரம்ழான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்றுகாலை இவ்வாறு குண்டு வெடித்துள்ளது. மேலும் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்-

accident (12)திருகோணமலை அலஸ்தோட்டப் பகுதியில் நேற்று இரவு துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பாலையூற்றைச் சேர்ந்த எம்.சித்ரவேல் மெனி (வயது 62) என தெரியவந்துள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அநுர சேனாசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு-

anura senanaike policeறக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாசநாயக்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது.

கொழும்பு கோட்டை பிரதம நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுர சேனாநாயக் தொடர்பில் பிணை மனு தாக்கல் செய்வதாயின் அதனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மலையாளபுர மக்கள் குடிநீரின்றி அவதி-

asdfsdகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட மலையாளபுரம் கிராம மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் தமக்கு உடனடியாக குடிநீர் விநியோகத் திட்டமொன்றை அமைத்துக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மலையாளபுரம் கிராமத்தில் வாழும் 130 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கிளிநொச்சி நகரிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட மலையாளபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 130 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்ற போதிலும் 30 குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிக்கக்கூடிய திட்டமொன்று கடந்த மே 12ம்திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சரினால் திறந்த வைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் விநியோகத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டதனால் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 1977ம் ஆண்டு முதல் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து குடியேறிய மக்களே மலையாளபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த இறுதி யுத்தத்தின்போது அனைத்தையும் இழந்த நிலையில் இடம்பெயர்ந்திருந்தனர். எனினும் 2010ம் ஆண்டு மீளக்குடியேறிய தமக்கு நிரந்தர குடிநீர் திட்டமொன்றை அமைத்துத் தருமாறு இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.