கண் எதிரில் தமிழர்கள் கொல்லப்பட்டது எப்படி: பெண் சாட்சியம்
 
kumarapuramதனது கண் எதிரிலேயே தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு சுட்டுக்கொன்றனர் என்று இலங்கை திருகோணமலை குமாரபுரம் தமிழர்கள் படுகொலை வழக்கு விசாரணையில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். அதே நேரத்தில் தான் தப்புவதற்கு இராணுவ வீரர் உதவியதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இரு வாரங்களாக தொடர்ந்தும் இடம் பெற்று வரும் குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் பெண்கள் உட்பட சுமார் 40 பேர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் மற்றும் நேரில் கண்டவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களே இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். மேலும், 18 பேருக்கு சனிக்கிழமை போலிஸ் ஊடாக நீPதிமன்ற அழைப்பானை கிடைத்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் சென்று சாட்சியமளித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர் கே. எஸ். இரத்தினவேல் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 27ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

49 வயதான யேசுதாசன் லெட்சுமி என்ற பெண் சம்பவத்தின் போது தான் உட்பட பலரும் கடையொன்றுக்குள் புகுந்திருந்த வேளை எதிரிகளில் ஒருவரான இராணுவ வீரர் ஒருவர், தான் உட்பட பலர் தப்புவதற்கு உதவியதாக கூறி அவரை அடையாளம் காட்டியிருக்கிhறார்.

தனது கிராமத்தில் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் தன் முன்னாலே கடையொன்றுக்குள் வைத்து இராணுவ துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
26 தமிழர்களை கொன்ற ராணுவம்
20 வருடங்களுக்கு முன்பு யுத்த காலத்தில் 1991 பிப்ரவரி 11-ம் தேதி இரவு இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 தமிழர்கள் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர்.

இந்த படுகொலை வழக்கில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்கள் எதிரிகளாக அடையாளம் காணப்பட்டு மூதூர் போலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1996ம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி எதிரிகள் இந்த வழக்கை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

மேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரிலே இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றன.
நீதி கிடைக்க வேண்டும்
தமிழ் பிரதேசமொன்றில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுமானால் அது தங்களுக்கு பாதிப்பாக அமையும் என கருதி தந்திரோபாயமாகவே இந்த மேல் முறையீட்டை செய்திருக்கின்றார்கள் என்கின்றார் மனித உரிமைகள் வழக்கறிஞர் கே. எஸ். இரத்தினவேல்.

இந்த நீதிமன்றத்திலாவது தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாட்சிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு சென்று சாட்சியமளிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை ஏனைய ஆறு பேருக்கு எதிராகவே நடைபெற்று வருகின்றது.

ஏற்கெனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 6 இராணுவ வீரர்களும் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடரும்.