வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

collegeவவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை புறநகர்ப்பகுதியாகிய தாண்டிக்குளத்திலா அல்லது நகருக்கு வெளியே ஓமந்தையிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி இறுதி முடிவின்றி தொடர்கின்ற நிலையில், வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரிக்கு எதிரில் தாண்டிக்குளத்தில், இந்த நிலையம் அமையக்கூடாது எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.vavuniya .தாண்டிக்குளம் விவசாய கல்லூரிக்கு எதிரில் உள்ள விவசாய விதை உற்பத்தி பண்ணைக்குரிய காணியில், இந்த பொருளதார மத்திய நிலையத்தை அமைப்பது குறித்த ஆலோசனையும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், அதனை அங்கு அமைக்க முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராரும், நகருக்கு வெளியில் ஒமந்தையிலேயே அதனை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் உள்பட மற்றொரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.