வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

omanthaiஇலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது.

வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.imagesஎனினும், அதனை அங்கு அமைக்க முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு சாரரும், நகருக்கு வெளியில் ஓமந்தையிலேயே அதனை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் உட்பட மற்றுமொரு சாரரும் வாதிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் எதிரும் புதிருமாக ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் இரண்டு இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறார்.

ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான காணி ஒதுக்கீட்டில் பிரச்சினைகள் இல்லை.எனவே, அந்த அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

ஆயினும், ஓமந்தை காணியை எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா 200 மில்லியன் ரூபாய் நிதியை உடனடியாகப் பயன்படுத்தப்படாவிட்டால், திரும்பிச் செல்லும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக தாண்டிக்குளத்தில் அதனை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விஷயம் ஒரு விவகாரமாகத் தொடர்ந்தும் முடிவின்றி நீடித்துக் கொண்டிருக்கின்றது