பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் வெளியிட்டுள்ள அறிக்கை-
பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் சம்பந்தமாக காணப்பட்ட இழுபறி ஒரு இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் “பேய்கள் உலாவும் இடத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கமுடியாது” என கிராமிய பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் கூறி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதும் அருவருக்கத்தக்கதுமான ஓர் விடயமாகும்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் உத்தரவுக்கமைய, பெரும்பாலான விவசாய பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், துறைசார்ந்த நிபுணர்கள், பொதுமக்கள், மாவட்ட அபிவிருத்தியின் நலன் விரும்பிகள் போன்றவர்களின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கை சேர்ந்த பெரும்பான்மையான மாகாணசபை உறுப்பினர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இனம் காணப்பட்டுள்ள ஒமந்தை பற்றிய அமைச்சரின் கூற்று அவரது பேரினவாத மனநிலையை தெளிவாக காட்டுகின்றது.வடக்கின் பொருளாதார மத்திய நிலையத்தை ஏதேனும் காரணங்களை காட்டி தனது பிரதேசமான மதவாச்சிக்கு மாற்றுவதிலே அமைச்சரின் கவனம் குவிந்திருப்பது வெளிப்படையானது. வன்னி மக்களின் வாக்குகளினால் அமைச்சர் பதவி பெற்றவர்கூட அதற்கும், தனது உறவினர்களின் வியாபார மேம்பாட்டையும் கருதி ஒத்துழைப்பு வழங்குகின்றார் என்று எண்ணுமளவிற்க்கு அவரது செயத்திட்டங்களும் அமைக்கின்றன. தமது வியாபாரம் சார்ந்து, அரசியல் வளர்த்து செயல்படுவதற்கு வடக்கு மக்களின் நலன்கள்குழி தோண்டிப் புதைக்கபடுவதனை என்றும் நாம் அனுமதிக்க முடியாது. 2010 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைய விடாது தடுப்பதில் வெற்றிகண்ட இனவாதிகளும், வியாபாரமுதலைகளும் மீண்டும்மீண்டும் தமது கைவரிசையைக் காட்ட முனைகின்றனர் என்பதை அமைச்சரின் “பேய்” கதைகள் வெளிக்காட்டுகின்றது.
ஓமந்தை பகுதியானது யுத்தம் தொடங்க முன்பு மிகவும் வளமான விவசாய பிரதேசமாகவும், கல்வியில் சிறந்ததாகவும், சிறந்த வியாபார தளமாகவும் சிறப்புற்று இருந்தது அமைச்சருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அமைச்சரின் நம்பிக்கை அடிப்படையில் பார்த்தால், ஓமந்தையில் மட்டுமல்லாது மேற்கே சிலாவத்துறை இல் இருந்து கிழக்கே முள்ளிவாய்க்கால் வரை அரச படைகள் யுத்தம் நடாத்திய அத்தனை இடத்திலும் பேய்கள்தான் உலாவுகின்றன. அத்தனை இடங்களும் சுடுகாடாய்தான் இருந்தன. வடக்கின் இந்த நிலைக்கு அமைச்சரும் ஒரு பங்காளிதான் என்பதை அமைச்சர் மறந்துவிடக்கூடாது.
அமைச்சர் கூறிய பேய்கள் உலாவும் அந்த பிரதேசத்தில் தனி ஒரு மனிதனால் சிதைக்கபட்ட கோவில் ஒன்றை எட்டு மாத காலத்தில் 150 க்கும் குறைவான தொழிலாளர்களின் உதவியுடன் 35 கோடி பணத்தில் கட்டி அப்பகுதியை வளம்படுத்தவும் ஆற்றுப்படுத்தவும் முடியுமானால், வடக்கின் பொருளாதார மத்திய நிலையத்தை ஆறு மாதகாலத்தில் அமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு அமைச்சரினால் ஏன்வழங்க முடியாது????
தென் இலங்கை அரசுகள் திட்டமிட்டு சுடுகாடாக்கிய பிரதேசத்தை, வளம்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், எதிர்கால அபிவிருத்திக்கும் ஏற்ற இடங்களாக்குவதிற்கு மாகாண அரசு கடுமையாக போராடி வருகின்றது. அதே நேரத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் ஏற்கனவே அமைக்கபட்ட பயனுள்ள விடயங்கள், கட்டமைப்புகள் அழிக்கபடுவதினை ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கின் ஒரே ஒரு விவசாயகல்லூரி, அதனுடன் இணைந்த பாரம்பரியமான விதை மற்றும் கன்றுகள் உற்பத்தி செய்யக்கூடிய தாய்தாவர பண்ணை, இதனுடன் இணைந்த நாற்றுமேடைகள், நீண்ட காலமாகவே குடியிருந்துவரும் மக்கள் குடியிருப்புகள் போன்றவற்றை சிதைத்து அந்த இடத்தில் இன்னும் ஒரு அபிவிருத்தியை கொண்டுவர வேண்டும் என எண்ணும் அமைச்சரின் பிடிவாதம் மிக கொடுரமான மனநிலையாகும்.
ஆயுத மோதல்களுக்கு முன்பு வடக்கின் பொருளாதார மத்திய நிலையமாக கிளிநொச்சி நகரின் பிரதான சந்தையே இயங்கிவந்தது. அதே நேரத்தில் ஆயுத மோதல்களின் பின்பு, வடக்கின் பொருளாதார மையமாக மாங்குளம் பகுதி பல சந்தர்பங்களில், பல தரப்பினராலும் இனம்காணப்பட்டிருந்தது. பலவகைகளிலும் அதுவே பொருத்தமான இடம் என்பது எமது நிலைப்பாடும் ஆகும். இருந்தும்கூட ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்று வரையறுக்கப்பட்ட தெரிவில், இயலுமானளவுக்கு வடக்கை நோக்கியதாக ஓமந்தையை தெரிவு செய்ய நாம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்,.
ஆக சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிகள் இடம் கொடுக்காத கதையாகவே வடக்கிற்கான அபிவிருத்தி திட்டங்களின் இன்றைய நிலை காணப்படுகின்றது. ஓமந்தையில் உள்ள “பேய்களை” அல்ல, மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் பாராளுமன்றத்தில் உலாவும் பேரினவாத பேய்களை விரட்டுவதின் மூலமும், பேரினவாத சிந்தனைகளை தோற்கடிப்பதின் மூலமுமே வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் பிரதேச மக்களிடம் பயனுள்ளதாக சென்றடையும் என்பதே எமது நிலைப்பாடாகும்,
க.சிவநேசன் (வட மாகாண சபை உறுப்பினர்)
14.07.2016.