யாழ் உட்பட எட்டு பல்கலைக்கழகங்களுக்கு தொழில்நுட்ப பீடம்-

jaffna campusயாழ்ப்பாணம் உள்ளிட்ட எட்டு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொழில்நுட்ப பீடங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி 5 வீதத்தால் அதிகரிக்கின்றது. இந்நிலையில், பட்டப்படிப்பை தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான வசதிகளை செய்துகொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம், தென்கிழக்கு, களனி, கொழும்பு, பேராதனை, ஊவா வெல்லஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென இவ்வருடத்தில் 1,369 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கும், 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு தேவையான நிதியினை திறைசேரியிலிருந்து ஒதுக்கிகொள்வதற்கும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்லவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

வீட்டுக் கிணற்றில் 06 கைக்குண்டுகள் இனங்காணப்பட்டன-

ewrereயாழ். பொம்மைவெளி பகுதியில் 6 கைக்குண்டுகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும், குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதி வீடொன்றில் கிணற்றை வீட்டு உரிமையாளர் இன்று துப்பரவு செய்துள்ளார்.

இதன்போது கிணற்றில் 6 கைக்குண்டுகள் இருப்பதைக் கண்டு உடன் யாழ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது பொலிஸார் அங்கு சென்று கைக்குண்டுகளை பார்வையிட்டுள்ளனர். அதில் 03 பழைய குண்டுகள் மற்றும் 03 புதிய குண்டுகள் இருப்பதாகவும், அக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வர் கொலை, விசாரணைகள் நிறைவு-

rtrtrபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவுசெய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணை இடம்பெற்றது. எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. இதன்போது பிரதிவாதியான துமிந்த சில்வா, சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல நீதிபதிகளின் அனுமதியைக் கோரியிருந்தார். அதற்கான விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால், அந்த வேண்டுகோளை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 8ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதுடன், அனைத்து பிரதிவாதிகள் மற்றும் மனுதாரர்கள் சார்பாக எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்க முடியுமென மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.