பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின் சமூகமயமாதலே எமது சமூகத்தின் வெற்றி-திரு க.சந்திரகுலசிங்கம்-(படங்கள் இணைப்பு)-
பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடையே சிறந்த தொடர்பு முறை முன்பள்ளி முதல் உயர்தரம் வரை சிறப்பாக இருத்தலின் ஊடாகவே எமது சமூகத்தின் கல்வியில் பாரிய மாற்றத்தை தற்காலத்தில் மேற்கொள்ள முடியும் என வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வவுனியா அருணோதய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் (16.07.2016) நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தின் தேவை கருதி சிறந்த முறையில் ஆசிரிய வளங்களுடன் செயலாற்ற வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. மாணவர்கள் மீது அதிக அக்கறையினை பெற்றோர்களுடன் ஆசிரியர்களும் காட்ட வேண்டும். காலத்தின் போக்கில் மாணவர்களின் எண்ணங்கள் மாற்றமடைவதனால் அவர்களின் செயற்பாடுகள் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு இல்லையெனில் பாதைமாறிப்போகும். எனவே ஆரம்ப கல்வியில் நாம் அக்கறை செலுத்தி நல்லொழுக்கம் உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் எனவும். இவ் முன்பள்ளியிலுருந்து வெளியேறும் மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் சிறப்பு பெறுபேறுகளை தற்போது பெற்றுக்கொள்வதுடன், சிறந்த நற்பண்புள்ள மாணவர்களாக செயற்படுவதற்கு இவ் முன்பள்ளியின் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பே காரணம் என தெரிவித்தார். இவ் வாணி அருணோதய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி வேப்பங்குளத்தில் உள்ள பாடசாலை விளையாட்டு அரங்கத்தில் அதிபர் திரு எஸ்.தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவடட பாராளுமன்ற உறுப்பினர் திரு ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா, வஃமுஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ரம்சீன் அவர்களும் கலந்து கொண்டார்கள். கௌரவ அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன், வ.பாவற்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் திரு ஸ்ரீ.கந்தவேள், மத்யஸ்த சபை உறுப்பினரும் சமாதான நீதவானும் ஆகிய திரு.எம்.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.