வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 27 வது வீரமக்கள் தினம்.! (படங்கள் இணைப்பு)-
புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வீர மக்கள் தின நிகழ்வுகளின் இறுதி நிகழ்வு 16.07.2016 சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இடம்பெற்றது. புளொட் அமைப்பின் கௌரவ தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக செயலாளர் தோழர் எம்.பற்றிக் அவர்களின் நெறிப்படுத்தலில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை அடுத்து கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் திரு சு.சதானந்தன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் திரு க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், ஓய்வுபெற்ற அதிபர் திரு.சிவசோதி, கழகத்தின் உப தலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கழகத்தின் உப தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ராகவன், தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, கழக பொருளாளர் இளங்கோ, முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் அன்ரன் பொன்னையா, மகளிர் அணியைச் சேர்ந்த தோழர் ஜெஸ்மின், செயற்குழு உறுப்பினர்களான செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் தோழர் குகதாசன், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (சிவம்), மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசம்பு ,கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சூரி, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக், கழகத்தின் மாவட்ட குழு உறுப்பினர்களான தவராஜா மாஸ்டர், நிஷாந்தன், ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, தனியார் பேரூந்து நடத்துனர் சங்கத் தலைவர் ரஞ்சன், இளைஞர் அணி சார்பில் பிரதீபன் ஆகியோர் ஈகைச்சுடர்களினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து கழகத்தின் செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து, நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் மலர் அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். மலர் அஞ்சலியினை தொடர்ந்து, நினைவுரையினை ஓய்வுபெற்ற அதிபர் திரு சிவசோதி அவர்கள் நிகழ்த்தினார். அதனை அடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரெலோ அமைப்பைச்சேர்ந்த திரு வினோ நோகராதலிங்கம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார். அதனை அடுத்து கழகத்தின் ஜேர்மன் கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மறைந்த கழக உறுப்பினர்கள் இருவரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களாலும் செயலாளர் சு.சதானந்தன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.. தொடர்ந்து கழகத் தலைவர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இறுதிநாள் நிகழ்வு சிறப்பு நினைவுரையை ஆற்றினார். இறுதியாக நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனைவரும் அங்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த சக கட்சித் தலைவர்கள் சக அமைப்பு போராளிகள், கழக கண்மணிகள் அனைவரது உருவப்படங்களுக்கும் விசேட அஞ்சலிகளையும் வணக்கங்களையும் செலுத்தியிருந்தனர். இறுதி நாள் நிகழ்வுகளை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் திரு சு.காண்டீபன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.