கிளிநொச்சி அறிவியல் நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் அங்குராப்பணம்-

18-7-2016 15.7.49 4இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காணியிலேயே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் இன்றுகாலை 10மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இதற்கான நிர்மாணப்பணிகள், சாதனங்கள் வழங்கல், இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றுக்காக ஜேர்மன் அபிவிருத்தி வங்கியினால் 8.4 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்ட ஒரு தொழிற்பயிற்சி நிறுவனமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திறன்விருத்தி மற்றும் தொழிற்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இந்திய உயர்ஸ்தானிகர் நடராஜன், பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், மஸ்தான், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் தசைநார் பயிற்சி இயந்திரம் அன்பளிப்பு-

asdads
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரினால் வட்டு இந்துக் கல்லூரி விசேட தேவைக்குரிய மாணவர்களின் அலகுக்கு ரூபா 16,250 பெறுமதியான தசைநார் பயிற்சி இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பமானது வட்டு இந்து கல்லூரி அதிபரினால் எமது சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ் இயந்திரம் கல்லூரியில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிhர் சங்க தலைவர் கு.பகீதரனால் வழங்கி வைக்கபட்டுள்ளதுடன் ஏற்கனவே இப் பாடசாலையின் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கு எம்மால் தையல் இயந்திரம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.
இவ் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கு உற்ச்சாகத்தை ஊக்குவித்து அவர்களின் பிறப்பிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து இவர்களும் ஏனைய மாணவர்கள்போல் சமூகத்தில் வாழ வைப்பதே எங்களின் அவா. இவ் கைங்கரியத்தை செய்ய முன்வந்த லண்டனைச் சேர்ந்த அ.கிருபாகரன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரும் பாடசாலை சமூகமும் நன்றிகள் தெரிவிக்கிறோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)-

பத்திரிகை அறிக்கை-

K.Sivanesan Bavanமுல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி நடாத்த முற்படுகின்ற சாத்வீகப் போராட்டத்தினை கைவிடத் தூண்டும் முயற்சிகள் தமிழ் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கசியும் செய்திகள் குறித்து நாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் யாராகிலும், தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்கு அவர்களுக்குள்ள உரிமைகளை மறுக்க அல்லது பலவீனப்படுத்த அல்லது அதன் நோக்கங்களை திசைதிருப்ப எவருக்கும் உரிமை கிடையாது. காலத்துக்குக் காலம் அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ் அரசியல் தலைமைகளாலும், அரச மற்றும் படைத்தரப்பு அதிகாரிகளாலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அவை கைவிடப்படுகின்ற நீண்ட அனுபவத்தை கொண்டவர்கள் கேப்பாபிலவு கிராம மக்கள்.அரசியல் தலைமைகளின் இயலாமை வெளிச்சத்துக்கு வருகின்ற சந்தர்ப்பங்களிலேயே அம்மக்கள் மீண்டும், மீண்டும் தமது வாழும் உரிமைக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஒன்றில், தீர்வைப் பெற்றுக்கொடுக்க உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அல்லது அந்த மக்களை அவர்கள் வழியில் தமது உரிமைகளுக்காக போராட அனுமதிக்க வேண்டும்.

கேப்பாபிலவு மக்களின் வாழ்விடங்களுக்கான பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட இராணுவ முகாமின் அமைவிடம் சம்பந்தமான பிரச்சினையாக குறுக்கிவிட முடியாது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி பாரிய பிரச்சாரத்தை முன்னெடுக்கின்ற தற்போதைய அரசுகூட வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திரைமறைவில் ஊக்குவிக்கும் இராணுவ விஸ்தரிப்புவாதத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.

வலி வடக்கில் காணிகளை விடுவிப்பதாக காட்டி நாடகமாடும் அரசு, முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிப்பரம்பலின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கக்கூடிய பல்வேறுபட்ட தமிழின விரோத நடவடிக்கைகளை மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றமை தெளிவாகப் புரிகிறது.

மாவட்டத்தின் தெற்கு எல்லையில் புதிதாக சிங்கள மீனவக் குடியேற்றங்களை உருவாக்கி வருவதோடு, அதன் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கண்காணிப்பிலும், அனுசரணையின் கீழும் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பகுதியில் சிறீலங்கா அரசின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட முடியாத நிலையே காணப்படுகின்றது.

நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி, பௌத்த பிக்கு ஒருவரின் முன்னிலையில் பாதுகாப்பு படைவீரர்களின் உதவியுடன் தமிழருக்குச் சொந்தமான காணியில் அடாத்தாக நிர்மாணிக்கப்பட்டுவரும் விகாரையானது, நாட்டின் சட்டம் ஒழுங்கு முறைகளை கேலிக்கூத்தாக்கிவிட்டது.

இவ்வாறான இனவிரோத நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே கேப்பாபிலவு கிராமமம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு இராணுவத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைந்துள்ள நிலையில் இந்த முகாமின் அவசியம்தான் என்ன? முகாம் அவசியம் தான் எனில், அருகில் ஏராளமான அரச நிலங்கள் இருக்கத்தக்கதாக மக்களின் குடிநிலங்களை கைவிட மறுக்கும் நோக்கம் தான் என்ன?

வெறும் இரண்டு பரப்பு காணித் துண்டுகளை வழங்கி மக்களை மிக நெருக்கமாக குடியமர்த்தி அந்த மக்களின் இயல்பான, வளமான, பண்பாடுகள் நிறைந்த எதிர்கால வாழ்வை இல்லாமல் செய்வதில் உள்ள தேவைதான் என்ன? தண்ணீரூற்று – புதுக்குடியிருப்பு பிரதான வீதியின் புனரமப்புகூட இந்த முகாமின் அமைவிடத்தினால் தடைகளைக் கண்டுள்ளது.

எனவே, அநியாயமாகவும், ஆக்கிரமிப்புத் தனத்துடனும் கைப்பற்றப்பட்டுள்ள தமது நிலங்களை கேட்டு கேப்பாபிலவு மக்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டமானது காலத்தின் தேவையும், அடிப்படை உரிமைகளை பெற்றிட அவர்களுக்குள்ள பொருத்தமான வழிமுறையும் ஆகும்.

எனவே அரசியல் தலைமைத்துவங்கள் எவரும் அவர்களது போராட்டத்திற்கு குறுக்காக நில்லாது, வலுச்சேர்ப்பதே நியாயமாக இருக்கும்.

க.சிவநேசன்,
மாகாணசபை உறுப்பினர்,
வடக்கு மாகாணம்.
18.07.2016

எவன்காட் கப்பலின் கெப்டனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்-

avant gardeகைதுசெய்யப்பட்டுள்ள எவன்காட் கப்பலின் மாலுமி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சந்தேகநபரை, எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி மேலதிக நீதவான் கே.எல்.பி.பண்டார உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஜெனட் எனும் பெயருடைய 43 வயதான இவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் (ஜூன்) 23ம் திகதி பிற்பகல் காலி துறைமுகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். எவன்காட் கப்பல் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தல் மற்றும் சட்டவிரோதமாக வெடிபொருட்களை தன்னகத்தை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிங்கப்பூர் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

qwewewewwஇலங்கையை பொறுத்தவரை, சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் முதலீடுகளையும் ஏற்றுக்கொள்ளும் எதார்த்தவாதியாக உள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள அவர் அந்த நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சீன கடற்படை கப்பல்கள், எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கை வருவதை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தியாவுடன் இலங்கை கொண்டிருக்கும் விஷேட நெருக்கத்தை தக்க வைத்துக்கொண்டு சீனா அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகள் உரிய முறைகளின் கீழ் எரிபொருள் நிரப்பலுக்காக இலங்கைக்கு வந்துசெல்ல அனுமதியளிக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்டநெசனல் என்டபிரைசஸ் ஒன் சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தங்களே இன்று இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுவீஸ்குமாரின் தயார் சிறைச்சாலையில் உயிரிழப்பு-

vithya kolaiயாழ். புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான சுவீஸ்குமாரின் தயார் நேற்றிரவு யாழ் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில், 9ஆவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது தாயாரான மகாலிங்கம் தவநிதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சந்தேகநபர்களின் உறவினர்கள் தன்னை மிரட்டுவதாக, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார், நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். மாணவியின் தாயாரின் முறைப்பாட்டுக்கு இணங்க நடவடிக்கை எடுத்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், சுவிஸ்குமாரின் தாயாரையும் அவரின் மற்றுமொரு உறவினரையும் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தனர். சுவிஸ்குமாரின் தாயார், சிறையில் இருக்கும் போது, உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ கைதாகி விளக்கமறியலில், நாமல் ராஜபக்சவுக்கு பிணை-

basilதிவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காகச் சென்றிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 70 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.