தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர் பாதுகாப்பு கலந்துரையாடல்-
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஹம்சநாதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கரைச்சி பிரதேச தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, கல்வி நிலைய கட்டடங்களை உரிய முறையில் அமைத்தல், குடிநீர் வசதி மற்றும் மலசலகூடங்களை மாணவர் தொகைக்கமைய அமைத்தல், மாலை நேர வகுப்புக்களை மாலை 6 மணிக்கு முன்பாக நிறைவுக்கு கொண்டுவருதல், இரவு நேர வகுப்புக்களை தவிர்த்தல், குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் விசேட வகுப்புகளை நடாத்துவதை தவிர்த்தல், மாணவர்களின் உடல், உள நலங்களை அறிந்து செயற்படுதல், சிறுவர் துஷ்பிரயோகத்தை தவிர்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல தனியார் கல்வி நிலையங்கள், அடிப்படை வசதிகள் இல்லாமலும், பதிவுசெய்யப்படாத நிலையிலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இவை குறித்து கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென்ற நீதிமன்றின் உத்தரவிற்கமைய, மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்றைய கலந்துரையாடலின்போது குறித்த பிரச்சினைகளை எதிர்வரும் காலங்களில் நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.