தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது-பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்-

D.Sithadthan M.P,.தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்’ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது. ஏனென்றால், ஆரம்பத்தில் அகிம்சை என்ற தடத்தில் சென்றோம். பின்னர் ஆயுதப்போராட்டம் என்ற நிலையில் சென்றோம். தற்போது ஜனநாயகம், அகிம்சை என்ற தடத்திற்கு வந்திருக்கின்றோம். ஆனால் நிச்சயமாக தமிழ்த்தேசியம் என்பது அறுபது வருடங்களாக தாய் குழந்தைக்கு பாலூட்டுவது போன்று எம் அனைவருக்கும் ஊட்டி வளர்க்கப்பட்ட விடயம். அது மாத்திரமன்றி தேசிய உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தானாக உருவாகின்ற உணர்வாகும். ஆகவே அது தடுமாறுவதற்கு மக்கள் விடமாட்டார்கள். நாமும் நிச்சயமாக தடுமாற மாட்டோம். போராட்டங்கள் தடம் மாறுவதை இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் பார்த்திருக்கின்றேன். பலஸ்தீனம், தென்னாபிரிக்கா உள்ளிட விடுதலைப் போராட்டங்களில் அவர்கள் வேறுவேறு தளங்களில் சென்றுதான் இறுதி வெற்றியைக் கண்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ்த்தேசியம் தடம் மாறுகிறதா என்பதை விடமும் தடுமாறுகிறதா என்பதே பொருத்தமானதாகவிருக்கும்.

நீங்கள் விட்ட பிழைகள் என்னவென இங்கு பலர் கேட்டிருக்கின்றார்கள். போராட்ட காலங்களில் தவறுகள் நடைபெறவில்லை எனக் கூறமுடியாது. அந்த தவறுகள் நடக்கின்றபோது தவறுவிடுகின்றோம் என கருதவில்லை. சில தருணங்களில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இயக்கங்களுக்குள் பிரச்சினைகள் காணப்பட்டிருக்கின்றன. மறக்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. மறக்க முடியாது விட்டாலும் மன்னிக்கப்ப்டடன. அந்த வகையில் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமாகத்தான் எமது இலக்கை நோக்கி பயணிக்க முடியும். நாம் ஆரம்பம் முதலே சர்வதேசத்தை பிழையாக கணித்திருக்கின்றோம். இந்தியா தமது நலன்கள் எல்லாவற்றையும் விடுத்து எமது நலனுக்காக இங்கு வரவேண்டுமென எதிர்பார்ப்பு இருந்தது. பங்களாதேஷை உதாரணமாகக் கொண்டு இந்தியா மீதான அவ்வாறானதொரு அபிப்பிராயம் இருந்தது. தற்போதைய அனுபவங்களுக்கு பின்னர் இந்தியா அல்ல எந்த நாடாகவிருந்தாலும் அவர்கள் முதலாவதாக தமது நலன்களையே முன்வைப்பார்கள். அந்த நலன்களுக்குள்ளே எம்மை உள்வாங்க முடியுமா எனப் பார்ப்பார்கள். அவ்வாறில்லையேல் எம்மைவிட்டுச் செல்வார்கள். தவறுகள் காணப்படுகின்றன. அவை திருத்தப்பட வேண்டும். நாம் சரியான முறையில் ஒற்றுமையாக பயணிப்போமாகவிருந்தால் எமது பாதை இலக்கை நோக்கி சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.