தீர்வு பற்றி கலந்துரையாடாது சிலர் குழப்புவதற்கு வழி தேடுகின்றனர்-ஆளுநர்-

reginold coorayயாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடாமல் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள சில இனவாதிகள் அதனை மேலும் குழப்புவது எவ்வாறு என ஆராய்வதாக, வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நல்லிணக்க கொள்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வடுக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சூழலை வடக்கு மற்றும் தெற்கிலுள்ள இனவாதிகள் பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், சட்டம் மற்றும் அமைதிக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நாட்டுக்குள் இருக்க முடியாது என்றார்.

உள்ளக விசாரணையை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்காது-சுரேஸ் பிரேமச்சந்திரன்-

sureshஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்ளக விசாரணை தான் நடத்தப்படும் என்றால், அதனை ஒரு போதும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாது என, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘உள்ளக விசாரணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இராணுவத்தினருக்கு எதிராக செயற்படமாட்டோம், இராணுவத்தினை தண்டிக்கமாட்டோம் எனக்கூறும் இந்த அரசாங்கம், எதற்காக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்? ‘என்று கேள்வி எழுப்பினார். ‘சர்வதேச நீதிபதிகள், சர்வதேச சட்டத்தரணிகளின் பங்களிப்பு இல்லாத எந்த விசாரணையும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மாட்டாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகிய நாம், எமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம். மற்றைய பங்காளிக் கட்சிகள், தமது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று அவர் கோரியுள்ளார்.

மாவிலங்குதுறையில் த.வி.பு இலக்கத்தகடு, கைக்குண்டு, பழுதான சயனைட் மீட்பு-

werwerமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, கைக்குண்டு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை மற்றும் பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி போன்றவற்றை நேற்று மாலை மீட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்றுவேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், அங்கு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பி மற்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு பழுதடைந்த நிலையிலான அடையாள அட்டை என்பவற்றை மீட்டதுடன், கைக்குண்டு செயலிழக்கச்; செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்குப் பிணை-

uni-student-thisitharanயாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரனை, தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று அனுமதியளித்துள்ளார். அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார். மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவர் ஒன்றியத் தலைவரை செவ்வாய்க்கிழமை (19) கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர். இந்நிலையில் மாணவன் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகிய மாணவன், பிணை விண்ணப்பம் செய்தார். மாணவர் ஒன்றியத் தலைவரால் தாக்கப்பட்ட மாணவன் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், இவருக்குப் பிணை வழங்கக்கூடாது என பொலிஸார் மன்றில் கூறினர். எனினும், மாணவர் ஒன்றியத் தலைவர் எந்தவிதமான தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடவில்லையென சட்டத்தரணி கூறியதையடுத்து, நீதவான் பிணை வழங்கியுள்ளார்.