தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்-

faiser mustafaஅடுத்த வருட தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுமென, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அமைச்சில் அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். எல்லை மீள்நிர்ணய நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில், தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில, விரைவில் குறித்த நடவடிக்கை பூர்த்திசெய்யப்பட்டு, தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, இரண்டு, மூன்று மாடிகளை கட்டுவதற்கு அனுமதியை பெற்றுவிட்டு, அதற்கு அதிகமான மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள் அமைப்பவர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.   …மேலும் செய்திகளை வாசிக்க……
மலேசிய துணைப்பிரதமர் அஹமட் ஷகீட் ஹமீடி இலங்கைக்கு விஜயம்-

ahamed saheed kamidiமலேஷியாவுக்கான துணைப் பிரதமர் அஹமட் ஷகீட் ஹமீட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்றையதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இவருடன் வர்த்தகர்கள் குழுவொன்றும் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, சுற்றுலா, அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளின் ஒத்துழைப்புக்களை அபிவிருத்தி செய்வதே மலேஷியப் பிரதமரின் இந்த விஜயத்துக்கான நோக்கம் என தெரியவந்துள்ளது. மேலும், இலங்கைக்கு வரும் அஹமட் ஷகீட் ஹமீட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார்.

ச.தொ.ச. நிறுவன முன்னாள் தலைவர் கைது-

nalin-fernando-720x480கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் எனத் தெரிவித்து சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ, கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் ஜோன்ஸன் பெர்ணான்டோவின் அமைச்சின் கீழ் இயங்கிவந்த சதொச நிறுவனத்தில், பாரிய முறைகேடுகள் இடம்பெற்றதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சதொச நிறுவனத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் இன்று கைதுசெய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோவை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் கிராம அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கண்காட்சி-

1469087920_b0dca395-b553-49c2-90e3-ed6627b90923வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி குழுக்களின் கண்காட்சி இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கண்காட்சி கூடத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இன்று இடம்பெற்ற கண்காட்சியில், கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய மாதர் கிராம அபிவிருத்தி குழுக்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்வர் நாடுகடத்தப்படுவர்.

Navinnaஉரிய வீசா அனுமதியில்லாமல் இலங்கையில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12000 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதெனத் தெரிவித்த அவர் இவர்களைக் கைதுசெய்து நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கைதுசெய்து கூடிய விரைவில் நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டவர்களில் அதிகமானவர்கள் சுற்றுலா வீசாக்களின் மூலம் இலங்கை வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் ஆயுதக் கொள்வனவிற்கு உதவிய 13பேர்மீது குற்றப்பத்திரம் தாக்கல்-

ltteவிடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டினார்கள் எனத் தெரிவித்து, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சுவிஸ், ஜேர்மனி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த இவர்கள் மீது குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தமை அல்லது அதற்கு உதவியமை, மோசடி, போலி சான்றிதழ், பணச்சலவை, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நுண்கடன் திட்டங்களின் கீழ் சூரிச்சில் உள்ள வங்கியில் இருந்து நிதி திரட்டப்படடுள்ளதாகவும், உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் இந்த நிதி திரட்டல் இடம்பெற்றுள்ளதாகவும் சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுவிஸ் காவல்துறையின் உதவியுடன் நடத்திய விசாரணைகளில், கணிசமான நிதி புலம்பெயர்ந்தோரிடம் இருந்து திரட்டப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும் 2009ஆம் ஆண்டுஇலங்கையில் போர் முடிவுக்கு வந்ததுடன் இந்த நிதி திரட்டும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது பெலின்சோனாவில் உள்ள சமஷ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரம் தொடர்பான விசாரணைகள் எப்போது விசாரணைக்கு வருமென்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13 பேரின் விபரங்களையும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடவில்லை.