கறுப்பு யூலையின் 33ம் ஆண்டு நினைவுதினம்-
கறுப்பு யூலையின் 33ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை மாதம் 23ம் திகதியாகிய இன்றையதினம் முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 1983 ஜூலை 23ம் திகதி யாழ். திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதலில் 13படையினர் பலியானதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொண்டனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 74 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள்இ ன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்போது, பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 43 பேருக்கு தலா 01 ஏக்கர் மேட்டுக்காணிக்கான அனுமதிப்பத்திரமும், 29 பேருக்கு தலா அரை ஏக்கர் காணிக்கான அனுமதிப்பத்திரமும், 02 பேருக்கு தலா 01 ஏக்கர் வயல் காணிக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கட்டமாக அனுமதிப்பத்திரம் வழங்கவுள்ளவர்களுக்கான காணிக் கச்சேரியும் இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், பனிக்கன்குளம் கிராம அலுவலர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மலேசியாவில் நினைவுகூரப்பட்ட 27ஆவது வீரமக்கள் தினம்-
புளொட்டின் 27ஆவது வீரமக்கள் தினம் மலேசியா டமாங்கிறா டமாய் என்னும் பகுதியில் கடந்த 15.07.2016 வெள்ளிக்கிழமை தோழர் ரியாந்தன் அவர்களின் தலைமையில் நினைவுகூரப்பட்டது.
இதன்போது வீரமக்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன.
இந்நினைவுதின நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க……வேலையற்ற பட்டதாரிகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்-
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமுகத்தினரால் இன்றுகாலை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 9மாகாணங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் உள்ளக மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 32ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் அறிவித்துள்ள நிலையில் அந்த வெற்றிடங்களுக்கு தம்மை இணைத்துக் கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல், பட்டதாரிகளை வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கான வயது எல்லையை 45 ஆக அதிகரித்தல், 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுதல், பட்டதாரிகளுக்கான 55 ஆயிரம் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல், தகவல் உத்தியோகஸ்தர்களாக வேலையில்லா பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுதல், சகல மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வெற்றிடங்களை பூர்த்தி செய்தல் மற்றும் ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கு மாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்
பர்தா அணிந்து சென்ற இளைஞனும் காதலியும் கைது-
நாடு திரும்பிய காதலியை விமான நிலையத்தில் வரவேற்கும்போது அவருக்கு இன்ப அதிர்சி கொடுப்பதற்காக விமான நிலைத்திற்குள் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமாநிலைய பொலிஸார், இன்று காலை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனின் காதலி, நோர்வையிலிருந்து இன்றுக்காலை 11 மணிக்கு நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்கான அப்பெண்ணின் காதலனான 28வயதான இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளை வரவேற்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். கொழும்பு 12யைச் சேர்ந்த சந்தேகநபர் அப்பகுதிக்கு சென்றதுடன், தாங்கள் கொண்டுச் சென்ற பர்தாவை, விமான நிலையத்தின் மலசலக்கூடத்துக்கு சென்று மாற்றிக்கொண்டு மீண்டும் வரவேற்கும் பகுதிக்கு வந்து அமர்ந்துகொண்டனர். இவ்விருவரின் நடமாட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்படவே அவ்விருவரையும் விமானநிலைய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இந்நிலையில், நாடு திரும்பிய கைது செய்யப்பட்டவரின் காதலியை புலனாய்வு பிரிவினர் அழைத்துவந்து இருவரையும் விசாரணைக்குட்படுத்திய பின்னர் கட்டுநாயக்கா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள், தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குமாரபுரம் படுகொலை சந்தேகநபர்களுக்கு மரணதண்டனை வழங்க கோரிக்கை-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் – குமாரபுரம் கிராமத்தில் இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு, அரச தரப்பு சட்டத்தரணி சுதர்சன டீ சில்வா, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ணவிடம் கோரியுள்ளார். நேற்று அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர். 26 பேர் படுகொலை செய்யப்பட்ட இச் சம்பவம் தொடர்பில், ஆறு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய வழக்கின் சாட்சியங்களுக்கு ஏற்ப, முன்னாள் இராணுவ உறுப்பினர்களே இந்தக் கொலைகளை மேற்கொண்டமைக்கான நியாயமான சாட்சியங்கள் சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி சுதர்சன டீ சில்வா சுட்டிக்காட்டினார். முறைப்பாட்டாளர் சார்பில் வாய்மொழி மூலம் விடயங்களை எடுத்துக்கூறும் போதே, சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட அரச சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். குற்றம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களில் சில மாறுபாடுகள் ஏற்படலாம் என நீதிமன்றில் குறிப்பிட்ட அவர், சாட்சியங்களில் காணப்படும் மாறுபடுகள் அல்லது மாற்றங்கள் பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும் அளவுக்குப் போதுமானதாக இல்லை எனவும் கூறினார். அத்துடன், இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால், தனித்தனியாக 121 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் இம் மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜூரிகள் சபை முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. திருகோணமலை, தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த சந்தேகநபர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் மூதூர் – கிளிவெட்டி குமாரபுரத்தில் இந்தக் கொலை சம்பவத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் சாட்சி விசாரணைகள் கடந்த 27.06.2016 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 11 நாட்கள் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நேரடியாக பார்வையிட்ட கிராம மக்கள் சாட்சியங்களை வழங்கியிருந்தனர். அவர்கள், குறித்த இராணுவத்தினரை அடையாளமும் காட்டியிருந்தனர்.
ஜெர்மனியில் இருக்கும் இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் விசாரணை-
ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அங்குள்ள தூதரகத்தின் ஊடாக விசாரித்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் 10 பேரை சுட்டுக்கொன்ற நபர் 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் என்றும் அவர் பல ஆண்டுகளாக மியூனிச்சில் வசித்து வந்ததாகவும் ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறப்பட்டிருந்தது. இருப்பினும், பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பதின்ம வயது அகதி பவரியா மாகாணத்தில் ரயிலில் மக்களை ஒரு கோடாரி மற்றும் கத்தி கொண்டு தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து மியூனிச்சில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் முறைமையின்கீழ் வடக்கு மாகாணத்துக்கு மேலதிக ஆசனங்கள்-
புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு மாகாணத்துக்கு நாடாளுமன்ற ஆசனங்கள் மேலதிகமாக வழங்கப்படவேண்டும். யுத்தத்தின் பின்னரான வடக்கை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்த பிரதிநிதித்துவம் அவசியமாகும். எனவே சுதந்திரக்கட்சி இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக உள்ளதென அக்கட்சியின் பேச்சாளர் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 30 வருடகால யுத்தத்தின் பின்னரான வடக்கை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய தேர்தல்முறை உருவாக்கம் தொடர்பாக குறிப்பிடுகையில் டிலான் பெரேரா இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் தெடர்ந்தும் குறிப்பிடுகையில், தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்றும், இதில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை என்றும் கூறினார். ”இதற்கமைய 65 வீதம் தொகுதி அடிப்படையிலும் 35 வீதம் விகிதாசார அடிப்படையிலும் புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகவும் இருக்கலாம். அல்லது அதனைவிட கூடிய எண்ணிக்கைக்கு கூட செல்ல முடியும். எவ்வாறெனினும் 65வீத தொகுதி முறை 35வீத பிரதேசவாரி முறை உள்ளடங்களாக புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும். அதில் விருப்பு வாக்குமுறை எக்காரணம் கொண்டும் இடம்பெறக்கூடாது. தேர்தல் முறை மாற்றப்பட்டாலும் சிறுபான்மை மக்களின் நலன் கருதி பிரதிநிதிகளின் தெரிவானது விகிதாசார அடிப்படையில் இடம்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம். புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் கவனமாக இருக்கிறது. அதாவது சிறுபான்மை மக்களுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு வலயத்தை வழங்கும் வகையில் நாம் மற்றுமோர் யோசனையை முன்வைத்திருக்கிறோம். அடுத்துவரும் இரு நாடாளுமன்ற தேர்தல்களில் மாத்திரம் இவ்வாறு வட மாகாணத்திற்கு மேலதிகமாக ஐந்து ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என கோருகின்றோம். அதன்பின்னர் அதில் திருத்தத்தை கொண்டுவர முடியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்பவே இந்த பரிந்துரையை முன்வைக்கின்றோம்.” என்றும் கூறியுள்ளார்.