கிணற்றிலிருந்து தாயும், மகளும் சடலங்களாக மீட்பு, தந்தையும் உயிரிழப்பு-

murderமட்டக்களப்பு வெல்லாவெளி, காக்காச்சிவெட்டை கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து குழந்தை உட்பட இருவரது சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் பெண்ணின் தந்தையார் அடிகாயங்களுக்கிலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். காக்காச்சிவெட்டை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பிரசாந் விஜிதா மற்றும் அவரது மகளான ஒன்றரை வயதுடைய பிரசாந் சஸ்மி ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த தாயும் குழந்தையும் இன்று அதிகாலை முதல் காணாமற்போயிருந்த நிலையில் குறித்த இருவரும் கிணற்றில் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இதேவேளை உயிரிழந்த விஜிதாவின் தந்தையான 56 வயதுடைய பேரின்பராசா என்பவர் பலத்த அடிகாயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த விஜிதாவின் கணவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் தனிமையிலிருந்த சங்கானை சிறுவன் மீட்பு-

boyயாழ். சங்கானையை சேர்ந்த சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் சங்கானை சுழிபுரத்தை சேர்ந்த 11 வயதுடைய கரிகாலன் சுதர்சன் என்ற சிறுவனே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் தனியாக இருந்ததை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் அந்த சிறுவனிடம் வினவியபோது, தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து சிறுவனை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிறுவன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருக்கின்றான்.

ஜப்பான் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை-

japanஜப்பானின் ‘இனசுமா’ மற்றும் ‘சுஸ_ட்சுகி’ எனும் இரண்டு போர்க்கப்பல்கள், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. நல்லெண்ண அடிப்படையிலேயே குறித்த போர்க்கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்கள், கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டன. குறித்த கப்பல்கள் நாளை ஜப்பான் திரும்பவுள்ள நிலையில், இரு நாட்டு கடற்படைக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்தை பகிர்ந்து, நட்புணர்வை வளர்க்கும் நோக்கில், சில பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொக்காவில் விபத்தில் இருவர் உயிரிழப்பு-

accமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இன்றுமாலை 4.30அளவில் இடம்பெற்ற விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த அல்பட் ஜெயக்குமார் (வயது 24) மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் பலியாகியுள்ளனர். அவர்களின் ஒன்றரை வயது குழந்தை காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மினி பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விருவரும் பலியாகியுள்ளனர். மினி பஸ்சின் சாரதி தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும், அவரை பொலிசார் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.