வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்-கனடா-

cafsஉண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்குமென கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார். “கனேடிய தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் நினைவுகூரும், 1983 கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்கிறது. தமிழர்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போதும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அதேவேளை, தமது குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்களுக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் நீதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்தை கனடா தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும் கனேடியப் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் மாற்றமில்லை-ஐரோப்பிய ஒன்றியம்-

europ1இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளக விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது. இருதரப்பினராலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஐ.நா ஆணையாளரின் இலங்கை தொடர்பான யோசனைக்கு ஏலவே ஆதரவு வழங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாகி போல் கோட்பிரே, அதனடிப்படையில் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், விசாரணை பொறிமுறை குறித்த இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போல் கோட்ப்ரே தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்-எம்.கே.சிவாஜிலிங்கம்-

sivajiதமிழினப் படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமென, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் கடந்த 1983ல் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டதாக 53 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்டோரை நினைவுகூரும் வகையில், இன்றையதினம் தமிழ் தேசிய வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றுகாலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நினைவுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியபின், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்தோடு, தமிழ் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையில் ஓர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென இதன்போது குறிப்பிட்ட அவர், அதனை வெற்றிகொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் செய்திகளை வாசிக்க…..அம்பாந்தோட்டையில் முதலீடு செய்வது தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை-

sri lanka chinaஅம்பாந்தோட்டையில் 10 பில்லியன் டொலர் பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் உற்பத்தி நிலையம், கைத்தொழில் வலயங்கள், ஆகியவற்றை உள்ளடக்கியதாக, அம்பாந்தோட்டை பொருளாதார முதலீட்டுத் திட்டம் அமைந்திருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவின் முதலீட்டில் கட்டப்பட்ட மத்தள விமானநிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. பிரதமர் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இத் திட்டத்தை சீனாவிடம் முன்மொழிந்திருந்தார். இதுதொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் இலங்கை அரசாங்கம் தற்போது பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

யாழில் கொடுரமான முறையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை-

murderயாழ் – சங்காணை பகுதியில் 54 வயது முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அராலி கிழக்கு ஐயனார் கோவிலடி பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் ஞானரத்தினம் என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றுகாலை சங்காணை சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார்.

பின் வீடு திரும்பும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அராலி – சங்கானை வீதியில் தலைவேறு உடம்பு வேறாக வெட்டப்பட்ட நிலையில் இவர் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சடலத்தினைப் பார்வையிட்டுள்ளனர். இது குறித்த விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைவேலியில் வெடிபொருட்களை முழுமையாக அகற்றுமாறு கோரிக்கை-

minesமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மேற்கு கைவேலி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் எனவே அவற்றை அகற்றி தருமாறும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமது பிள்ளைகளினதும. தமதும் உயிருக்கு பாரிய ஆபத்து எழுந்துள்ளதாகவும் குறித்த பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் காரணமாக கிளிநொச்சி புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்தும் அனைவரும் இடம்பெயர்ந்து வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி 684 குடும்பங்கள் கைவேலி கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற நிலையிலும், காணிகள் மற்றும் வீதிகளை துப்புரவு செய்யும்போது வெடிக்காத நிலையிலுள்ள வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதாக கைவேலி மக்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் குறித்த பிரதேசம் கண்ணிடிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பிரதேசமாக இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மக்கள் அங்கு மீள்குடியேற்றப்பட்டனர். இந்நிலையில் அங்கு இன்னமும் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்படும் சம்பவங்கள் பிரதேச மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது

வட-கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமற்றது-அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல-

kiriyellaவடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும், மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அடுத்த வருட ஆரம்பத்தில் உத்தேச அரசியல் உத்தேச அரசியல் அமைப்பை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், அதிகாரப்கிர்வு சிக்கலை ஏற்படுத்தும், எனவும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் பிராதன இரண்டு கட்சிகளின் மட்டுமல்லாது சகல கட்சிகளும் சிந்தித்து வருகின்றன. சகல கட்சிகளின் பிரதிநிதித்துவங்களும் இதில் உள்ளடங்குகின்றன. அதேபோன்று உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பால் நாட்டின் ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும். நாட்டில் அமைதி நிலவுவதையும் நல்லிணக்கம் ஏற்படுவதையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலான இனவாத குழுக்கள் விரும்பவில்லை. அத்தோடு, தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லை. அதன் காரணமாகவே தற்போது உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை குழப்பும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க விரும்பியிருந்தால் யுத்தம் முடிவடைந்த பின்னரே அதனை பெற்றுக்கொடுத்திருப்பார்கள். மாறாக கடந்த ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர். புதிய அரசியலமைப்பானது, கடந்த கால முரண்பாடுகளை தவிர்த்து, நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் உருவாக்கப்படுமே தவிர, மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை ஏற்பட வழிவகுக்காது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.