வடக்கில் குளங்களை அபிவிருத்தி செய்ய ஜப்பான் உதவி-

japanமகாவலி அதிகாரசபையின் ஊடாக வடக்கில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்கா அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனை மஜிப் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியகபூர்வமாக விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இன்று மாகாண பணிப்பாளர் அலுவகத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர், வடக்கில் தற்போதைய விவசாய நிலைமைகள் மற்றும் அவற்றின் ஊடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படும் குளங்களின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இச்சந்திப்பில் மாகாண சபையின் உறுப்பினர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு செயற்றிட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

சுவிஸ் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது-சுவிஸ் தூதுவர்-

swissசுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது. ஆனால் அதிகார பகிர்வை, ஓரு நாட்டை பிளவுபடுவதும் அலகாக கருத்துப்பட கூறுவது தவறானது. உலகில் ஐம்பதற்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார். போரின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால் கடந்த கால மோதல்களுக்கு தீர்வுகாண அவை போதுமானதல்ல. மாறாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதுவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தற்போதுள்ள இலக்குகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கும் – சுவிஸர்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் இவற்றை கூறியுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவம் நிறுத்தப்படாது-பாதுகாப்புச் செயலர்-

karunasenaயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பிற்காக, இராணுவத்தினரை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தெற்கின் சில தரப்பினர் இந்தப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலோ அல்லது அதன் வெளியிலோ இடம்பெறவில்லை என பாதுகாப்பு செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க…….இந்தியாவில் ஒரு இலட்சம் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்-

sl-refugeesஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அகதிகள் தமிழ்நாட்டில் முகாம்களில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி தெரிவித்துள்ளார். அங்குள்ள 5,000 அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள அகதிகளுக்கு சுய தொழிலுக்கான நிதி உதவியையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தற்காலிகமாக பூட்டு-

airport (2)கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அடுத்த வருட ஜனவரி மாதம் முதல், தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, எட்டு மணித்தியாலங்கள், விமான நிலையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக, அமைச்சர் சிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். விமான ஓடுபாதையின் திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமா என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு “இதுவரை அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாள்வெட்டில் ஈடுபட்ட நால்வர் கைது-

arrest (9)யாழ் உடுவில் மேற்குப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் மேற்குப் பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் சிலர், அப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், தகராறில் ஈடுபட்டு இளைஞன் மீது வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் எஸ்.தினேசன் (வயது 18) என்ற இளைஞன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார் நான்கு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

பாடசாலைகளில் இலஞ்சம், ஊழல் சம்பந்தமான பாடங்கள் உள்ளடக்கம்-

exam ....பாடசாலை பாடவிதானத்திற்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பந்தமான பாடங்களை உள்ளடக்குவது தொடர்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பாடங்களை ஆறாம் தரம் முதல் கற்பிக்க தயாராகி வருகின்றனர். இது குறித்து கல்வி அமைச்சர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதோடு, தற்போது இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

புத்தூர் சந்தியில் இராணுவ வாகனம் மோதியதில் பெண் படுகாயம்-

accidentயாழ். மீசாலை, புத்தூர்ச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர், இராணுவ வாகனத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீசாலை – புத்தூர்ச் சந்தியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவிருந்த பஸ்ஸில் ஏறுவதற்காக குறித்த பெண் வீதியின் மறு பக்கத்திலிருந்து வீதியினைக் கடக்க முற்பட்டவேளை, சாவகச்சேரி நோக்கி பயணித்த இராணுவ பிக்கப் ரக வாகனத்தில்; மோதுண்டு படுகாயமடைந்தார். மந்துவில் கிழக்கைச் சேர்ந்த லி.உதயமலர் (வயது57)என்ற பெண்ணே சம்பவத்தில் படுகாயமடைந்தவராவர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை நிரந்தரமாக அபகரிக்க முயற்சி-

Captureமன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் மலைக்காடு காட்டுப் பிரதேசத்தில் நிரந்தர வீட்டுத்திட்டத்தை அமைத்து நிரந்தரமாக குடியமரத்தும் முயற்சிகளில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் தமது காணிகளை நிரந்தரமாக அபகரிக்கப்படவுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மக்களுக்கு சொந்தமான 2500 ஏக்கர் காணிகளை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கைப்பற்றிவைத்திருக்கும் கடற்படையினர், கடந்த ஒன்பது வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர விடாது தடுத்து வருகின்றனர். யுத்தம் காரணமாக கடந்த 2007 செப்டெம்பர் 5ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து வெளியேறிய 167 குடும்பங்கள் முருங்கன், தாழ்வுபாடு, நானாட்டான், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிகமாக குடிசைகள் அமைத்தும்,உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இந்நிலையில், 2012 ஜீன் 15 ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டு பிரதேசத்தின் சிறிய பகுதி ஒன்று துப்பரவு செய்யப்பட்டு முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர். முள்ளிக்குளம் பிரதேச மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்துமாறு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் வேண்டுகோளுக்கு அமைவாக கடந்த 2014 செப்டெம்பர் 5ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் 2014 ஆம் ஆண்டு கடற்படையினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் 600 ஏக்கர் வயல் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. இருப்பினும், வயல் நிலங்கள், வீட்டுக் காணிகள் உள்ளடங்கலாக 2500 ஏக்கர் மக்களின் கணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இந்த நிலையிலேயே, முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்காலிகமாக வசிக்கும் பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் 81குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கி, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் 2500 ஏக்கர் காணிகளை நிரந்தரமாக கைப்பற்றும் முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.