தொண்டைமானாறு தடுப்பணை புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-

thondamanaruயாழ். தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று (27.07.2016) தொடங்கி வைத்துள்ளார். தொண்டைமானாறு உவர் நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள் உருக்கினால் ஆனவை என்பதால் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத கறையில் உருக்கினாலான மடைக்கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்படவுள்ளது. தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி மழைநீரைச் சேகரிக்கும்போது தாழ்வான வயல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. இதனைத் தடுக்கும் நோக்குடன் இரு இடங்களில் வெள்ளத்தடுப்பணைகளும் கட்டப்படவுள்ளன. சீமெந்துக் கட்டுமானப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளுக்கென 99 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்புனரமைப்பு வேலைகள் யாவும் 2வருடங்களில் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், ஈ.சரவணபவன் ஆகியோரும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வே.பிறேமகுமார், பிரதி பணிப்பாளர் ந.சுதாகரன், பிரதிப் பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை-

courtsஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை கண்டியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தையும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வைத்துக் கொள்ளுமாறு, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் கசீம் ஆகியோருக்கு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது. கண்டி தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கோரிக்கையை கருத்தில் கொண்டே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பாத யாத்திரை செல்வோர் மாவனெல்லை நகரைத் தவிர்த்து தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, மாவனெல்ல நீதவான் என்.கே.மஹிந்த இன்று உத்தரவிட்டுள்ளார். மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் மாற்று வீதிகளைப் பயன்படுத்தி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயம் திருந்த தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்-நீதிபதி இளஞ்செழியன்-

ilancheliyanசமுதாயத்தில் நடைபெற்றுவரும் குற்றச்செயல்கள் குறைவடைந்து, குறுகிய காலத்தில் சமுதாயம் திருந்த வேண்டுமாயின் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் இவ்வாறு யாழ். நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து, சட்டரீதியான நீதிக்கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலொன்று, நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் நடைபெறும் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதால், சம்பந்தப்பட்டவர்களின் நடத்தையில் மாற்றம் ஒருபொழுதும் ஏற்படாதென்றும், சமுதாயத்தை திருத்துவதற்கு தண்டனை ஒன்றே சிறந்த வழி என்றும் நீதிபதி இளஞ்செழியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது, ஏனையோருக்கு குற்றச்செயல்கள் தொடர்பில் சிந்திப்பதற்கு கூட கால அவகாசம் வழங்காத வகையில் அமையவேண்டுமென அவர் மேலும் கூறியுள்ளார். ஒழுக்கங்களை கற்றுத்தரும் பாடசாலைகளில், மாணவர்கள் மீது இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், பாடசாலையில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, அதுகுறித்த விசாரணைகள் கிரமமான நடைபெற வேண்டுமென இதன்போது அதிபர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க….ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கில் இராணுவவீரரை அடையாளம் காட்டிய சாரதி-

lasanthaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் தொடர்பான அடையாள அணி வகுப்பு இன்று நடைபெற்றுள்ளது. கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி, கொலைச் சம்பவத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டியதாக கூறப்படும் சார்ஜன்ட் மேஜரை, லசந்த விக்ரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்ட முடிந்ததாக, லசந்த சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதுல எஸ்.ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மேலும், கொலை நடந்த அன்று அதனை நேரில் பார்த்தவர்களை எதிர்வரும் 3ம் திகதி சாட்சியமளிக்க அழைக்குமாறு, கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தின் இன்று உத்தரவிட்டார் எனவும் சட்டத்தரணி அதுல எஸ்.ரணவக்க கூறியுள்ளார். இதேவேளை, கொலை இடம்பெற்றபோது, தான் அணிந்திருந்த தலைக்கவசத்தை கழற்றியபடி, அங்கேயே பார்த்துக் கொண்டிருந்த நபரை, கண்ணால் கண்ட சாட்சி ஒருவரை, 3ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைத்துள்ளதோடு, அன்று மீண்டும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ உறுப்பினரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து விழிப்புணர்வு எச்சரிக்கை-இராணுவ ஊடகப் பிரிவு-

zxzxzxதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளை மீள ஒருங்கிணைத்தல் அல்லது மீள எழுச்சிபெறுதல் தொடர்பான சாத்தியங்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பிரச்சாரம் செய்யப்படுதல் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் கூறியுள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்-

trகிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைகழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டு இதுவரை மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலான பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு எதிரான சுலோகங்களையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர். பெருமளவிலான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குமாரபுரம் படுகொலைகள், இராணுவத்தினர் அறுவரும் விடுதலை-

courtsதிருகோணமலை மூதூர், குமாரபுரத்தில் 20 வருடங்களுக்கு முன்னதாக 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பை அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன இன்று அறிவித்துள்ளார். பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தனித்தனியாக சுமத்தப்பட்டிருந்த 101 குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர்களை விடுவித்து, விடுதலை செய்ய ஜூரிகள் இன்று தீர்மானித்தனர். 1996ம் ஆண்டு பெப்ரவரி 11ம்திகதி மூதூர் குமாரபுரத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 26 பேரை சுட்டுப்படுகொலை செய்ததாகவும் மேலும் 39 பேருக்குக் காயங்களை ஏற்படுத்தியதாகவும் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சம்பவம் பற்றிய ஆரம்ப விசாரணைகள் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன் பின் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய வழக்கு விசாரணை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் 27ம் திகதி முதல் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கின் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. சாட்சி விசாரணைகளின்போது, தமது உறவினர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்ததை தாம் நேரில் கண்டதாக குமாரபுரத்தைச் சேர்ந்த பலர் சாட்சியமளித்திருந்தனர். பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அரசதரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி சுதர்ஷன் டி சில்வா கோரிக்கை விடுத்திருந்தார். முறைப்பாட்டாளர்கள் பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாக பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் இதன்போது வாதிட்டிருந்தனர். சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடுகளைக் கருத்திற்கொண்டு பிரதிவாதிகள் 6 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். இவ்வழக்கில் எட்டு இராணுவ உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அவர்களில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், எஞ்சிய 6 இராணுவ உறுப்பினர்களை அனுராதபுரம் மேல்நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.