நல்லிணக்கம், பொறுப்புகூறலில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-ஸ்டீபன் டையன்-
உள்நாட்டு போரின் பின்விளைவுகள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், உணர்ச்சிபூர்வமான விடயங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் பொறிமுறைகளில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பு அவசியம் என கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டையன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள், நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கனேடிய அமைச்சர் இவற்றைக் கூறியுள்ளார். இலங்கை மற்றும் கனடாவின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இலங்கை முன்னெடுத்துள்ள அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அதிகளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை விரைவில் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நல்லாட்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த கனடா பூரண ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளை, யுத்தம் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவி செய்யப்பட்ட அவர் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பீ.எச்.பியசேன பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. கடந்த ஆட்சியின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பிய சேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்று; கைப்பற்றப்பட்டிருந்தது. அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது. எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சாரதி நேற்று முன்தினமே சாரதியாக இணைந்து கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்படி கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூதூரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம்-
திருகோணமலை மூதூர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க….
மட்டக்களப்பில் கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்-
கிழக்கு பல்பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்பாக மூன்றாவது நாளாக இன்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்கள் இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தமக்கு வழங்கப்படும் மாதாந்த இடர் கொடுப்பனவினை அதிகரித்து அதனை ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியற்றுடன் இணைக்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தினை மீளாய்வு செய்ய வேண்டும், மருத்துவ காப்புறுதி வழங்கவேண்டும், ஓய்வூதிய வயதெல்லையை 57இல் இருந்து 60ஆக உயர்த்தவேண்டும், 2016 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை அமுல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150ற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டதுடன் ஆர்ப்பாட்டத்தின்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்து.
தெற்கில் பொருளாதார மையம் அமைக்க 15ஆயிரம் ஏக்கரை கேட்கும் சீனா-
இலங்கையின் தென்பகுதியில் பொருளாதார மையமொன்றை அமைப்பதற்கு சீன அரசாங்கம் 15,000 ஏக்கர் நிலப்பரப்பை கோரியுள்ளது. இதன்மூலம் ஒரு மில்லியன் தொழில்வாய்ப்புக்கள் உண்டாகவுள்ளதாக, நாட்டின் அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அனுமதி வழங்கப்படுமாயின், கடந்த சில வருடங்களாக முன்னெ டுக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த அபிவிருத்தி திட்டங்கள் தோல்வியடைந்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே இந்தப் பொருளாதார மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுமாயின், மிகவும் வெறுமையான சர்வதேச விமான நிலையம், 1.4 அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், மாநாடுகள் நடத்தப்படாத உலக வர்த்தக மாநாட்டு மையம் மற்றும் எப்போதாவது பயன்படுத்தப்படும் கிரிக்கெட் மைதானம் போன்றவை அனைத்தையும் உள்ளடக்கியே அமைக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முற்றுமுழுதான சீனாவின் நிதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 8 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் இதன்மூலம் சீனாவிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடனையும் திருப்பி செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வழங்கும் அபிவிருத்தி உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா தீர்மானம்-
இலங்கைக்கு வழங்கும் அபிவிருத்திக்கான உதவிகளை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான புதிய தூதுக்குழுவின் பணிப்பாளராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி அன்ரோ சிசோன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அமெரிக்காவினால் 2015 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான நிதியாண்டிற்காக இலங்கைக்கு 60 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதற்கான செயற்குழுவினரை அதிகரிக்கும் நோக்கில், புதிய தூதுக் குழுவின் பணிப்பாளராக கலாநிதி அன்ரோ சிசோன் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு-
நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் மற்றுமொரு அமர்வு கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்றுகாலை 9 மணியளவில் மக்களின் கருத்தறியும் அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்றும் நாளையும் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெறுகின்றன. நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு நாளை மறுதினம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும், 4ஆம் திகதி வெலிஓயா பிரதேச செயலகத்திலும் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.