ஆணைக்குழு விசாரணைகளில் கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படவில்லை-

DSC_00661-720x480 (2)காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படாததுடன், எமது கவனத்தை திசைதிருப்பும் முனைப்பிலேயே அவர்கள் செயற்பட்டனர் என காணாமல்போன இளைஞனின் தாயொருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வலய செயலணி இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த தாய் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் விசாரணைகளுக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இன்னும் வீடு திரும்பவில்லை. கடந்த காலங்களில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் நிலவியமையால் இந்த உண்மையை வெளியிட தயங்கினேன். அதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றபோது எமது கருத்துக்களை வழங்க உரியநேரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி விசாரணைகளை மேற்கொண்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு ஆடு, மாடு தருவதாகவும், நட்டஈடு தருவதாகவும் கூறி எங்களுடைய கவனத்தை திசை திருப்புவதிலேயே முனைப்பாக செயல்பட்டனர். கடந்த 2008, 2009ம் ஆண்டுகளில் விசாரணைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் எனது மகன் அவ்வாறு கொல்லப்படவில்லை. எனது மகன் எங்கேயோ ஒரு இரகசிய தடுப்பு முகாமில் தற்போதுவரை உயிரோடு இருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் வடக்கிலேயே அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தல்-

DSC_0042காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை களை மேற்கொள்ளும் அலுவலகம் கொழும்பில் அமைக்க கூடாது. அது வடக்கில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றிலேயே அமைக்கப்பட வேண்டும் என மன்னார் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணி இன்று காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த செயலணியானது, நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், காணாமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக நீதிமன்றங்களில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் துரிதப்ப டுத்தப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன், காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து சர்வதேசத்தின் தலையீட்டுடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, இவர்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதி குழுவினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும் காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க முடியாது எனவும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கக்பட்டதோடு சொத்து இழப்புகளுக்கு மாத்திரமே இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க….தேசிய அரசாங்கம் 5 வருடங்களுக்கு நீடிக்கும்-ஜனாதிபதி-

maithriஐக்கிய தேசிய கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தேசிய அரசாங்கம் 2 வருடங்களுக்கே செயல்படும் என்றிருந்தது. எனினும், அந்த தேசிய அரசாங்கம் 5 வருடங்களுக்கு நீடிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னாவையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை, மாவனல்லையில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடந்துவரவேண்டிய தேவையில்லை என்றும் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு பாதயாத்திரை செல்லமாட்டேன் என்றும் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை மூன்றாவது நாளாக தொடர்கிறது-

598358116JOகூட்டு எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை இன்று மூன்றாவது நாளாக நெலும்தெனியவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ம் திகதி பேராதெனியவில் இருந்து இப்பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. நேற்று மாவனல்லை, உதுவன்கந்த பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை நெலும்தெனியவில் நிறைவடைந்திருந்தது. இன்று நெலும்தெனியவில் இருந்து நிட்டம்புவை வரையில் இப்பாத யாத்திரை சென்றுள்ளது. பாத யாத்திரையை நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்பாத யாத்திரை பொது மக்களுக்காக இடம்பெறும் ஒன்றல்ல என்று அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தில் பாகுபாடு காட்டப்படமாட்டாது-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

maithiriஎத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற மூதூர் மாவட்ட நீதிமன்றத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். நீதி நிர்வாகப் பொறிமுறையை வலுவூட்டி மக்களுக்கு வினைத்திறனான நீதிச் சேவையைப் பெற்றுக்கொடுத்து சட்ட ஆட்சியைப் பாதுகாக்கும் நல்லாட்சி அரச கொள்கைக்கு ஏற்ப நீதி அமைச்சினால் 33 மில்லியன் ரூபா செலவில் இந்த நீதிமன்றக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் 62 இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவுசெய்து எதிர்பார்த்த முக்கிய விடயங்களில் சுயாதீனமானதும் பாரபட்சமற்றதும் நடுநிலையானதுமான சட்ட முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவது முதன்மையானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக தாம் அதிகூடிய கடப்பாட்டுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டத் தீர்வுகளைத் தேடிவரும் பொதுமக்களுக்கு அத்தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் எல்லோருடையதும் உடனடி கவனத்தைப் பெறவேண்டிய ஒரு விடயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்குமாறு தாம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட சட்டத் துறையில் உள்ள எல்லோரிடமும் ஒரு திறந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கை எடுத்துவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதுவும் அவ்விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலேயாகும் என்றும் கூறியுள்ளார். அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, ரவுப் ஹகீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாந்து, முதலமைச்சர் நசீர் அஹமட், பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.