இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு-

genevaஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவில் 177 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த நாடுகள் தொடர்பான மீளாய்வு நடைபெறவுள்ளது. அந்தவகையில் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறும். மேலும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர். மேலும் இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.

3 லட்சம் பேர் வாக்காளர்களாக பதிவுசெய்யவில்லை-மகிந்த தேசப்பிரிய-

mahinda desapriya (3)2016ஆம் ஆண்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியான சுமார் 3 லட்சம் இளைஞர், யுவதிகள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

18 முதல் 35 வயதான இந்த இளைஞர் யுவதிகளை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கட்டமைப்புக்கான சர்வதேச நிதியம் இணைந்து சமூக வலைத்தள வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேண்டும் என்றே தம்மை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் சட்டம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மணி விழா காணும் எங்கள் வித்தியாலயத்திற்கு பாராட்டுக்கள்-

mohanவவுனியா தாண்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள எமது வ.பிரமண்டு வித்தியாலயத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் தாண்டிக்குளத்தின் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்காய் அதன் தேவை கருதி 1956ஆம் ஆண்டு உருவாக்கப்படட வித்தியாலயம் வளர்ச்சி மற்றும் சரிவு என பல பரிமாணங்களுடன் தடுப்பு முகாமாகவும் தன்னை சமூகத்திற்காய் அர்ப்பணித்துள்ளது. காலத்தின் பரிணாம வளர்ச்சியில் தன்னையும் மாற்றிக்கொண்டு இன்றும் பல மாணவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக சமூகத்திற்கு மாற்றியமைத்து வழங்குவதையிட்டு பெருமிதம் கொள்வதோடு, கல்வி மட்டுமல்லாது சிறந்த நற்பண்புள்ள பிரஜைகளை இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் சாரணர் இயக்கத்தின் செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆசிரியர் சமூகத்துடன், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கிராமப்புற பாடசாலைகளின் வளர்ச்சியை மென்மேலும் அதிகரிக்கமுடியும். எனவே மணி விழாவுடன் சிறந்த கடடமைப்பை உருவாக்கி கல்விச் சமூகத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – புளொட் அமைப்பினருமாகிய நாம் என்றும் உறுதுணையாக இருப்போம்.
திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) முன்னாள் உப நகரபிதா, நகரசபை, வவுனியா.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்டம்-

batticaloaமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்றுகாலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்டம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் இகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, கையெழுத்து போராட்டம் ஆரம்பமானது. கலந்துரையாடலில் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தம்மிக முனசிங்க அமைப்பாளர் தென்னே ஞானானந்த தேரோ மாட்ட தலைவர் ரி.கிஸாந்த உட்பட முக்கியஸ்தர்கள் பங்கு கொன்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 ஏப்ரல் மாதம் முதல் பட்டதாரிகளாக வெளியேறிய 1500 பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக சங்க தலைவர் கிஸாந்த் தெரிவித்துள்ளார். கையெழுத்து போராட்டத்தில் பெறப்பட்ட கையொப்பங்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான வேலையற்ற பட்டதாரிகள் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.

குமாரபுரம் படுகொலை வழக்கினை மீள விசாரிக்குமாறு கோரிக்கை-

kumarapuram1996ம் ஆண்டு திருகோணமலை மூதூர் குமாரபுரத்தில் 26 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996ம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை மூதுரு}ர் குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குமாரபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க…பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேஷியாவிற்கு விஜயம்-

ranil wickramaபிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாளையதினம் இந்தோனேஷியா செல்லவுள்ளார். ஜகார்த்தா நகரில் இடம்பெறும் 12வது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் அங்கு செல்லவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ம் திகதி முதல் 4ம் திகதி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதோடு, உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டுக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 100 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2500 பேர் இந்த மாநாட்டுக்கு செல்லவுள்ளனர். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது விஷேட உரையொன்றையும் ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் காரணமாக பொலிஸார் ரயில் கடவை வாயிற்காப்போர் பணியில்-

railway crossநாடு பூராகவுமுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பளப் பிரச்சினை காரணமாகவே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, இந்தப் போராட்டம் காரணமாக, சில பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு இரண்டாயிரம் அழைப்புகள்-

ambulanceஇந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அரசாங்க வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு கூடாது-

sadsமனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மன்னார், ஒட்டுசுட்டான், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றிருந்தன. உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்களுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. நாட்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அதனடிப்படையில் இந்தப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்தறியும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கருத்தறியும் அமர்வுகளில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பலரும் பொதுமக்களின் காணிகளிலும், மக்கள் குடியிருப்புக்களிலும் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மக்கள் மத்தியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது நல்லிணக்கத்திற்குப் பாதகமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். போர்க்குற்றம் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற தொனியில் முல்லைத்தீவில் நடைபெற்ற அமர்வொன்றில் கருத்து வெளியிட்ட முன்னாள் போராளி ஒருவர், புனர்வாழ்வு என்ற போர்வையில் தாங்கள் இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்பே விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தண்டனையுடன் கூடிய பொதுமன்னிப்பே எங்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது நாங்கள் மீண்டும் யுத்தத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. சமூகத்தில் இணைந்து சாதாரண மக்களுடன் அமைதியாக வாழவே விரும்புகிறோம். எனவே, இதுபோன்று போர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் அந்த முன்னாள் போராளி. போர்க்குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதை ஒப்புக்கொண்டு சர்வதேசத்திடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். அத்துடன் அந்த விடயத்தைக் கைவிட்டுவிட்டு சமாதான வாழ்க்கையை வாழ்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(நன்றி பிபிசி)