Header image alt text

தொண்டைமானாறு தடுப்பணை புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-

thondamanaruயாழ். தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று (27.07.2016) தொடங்கி வைத்துள்ளார். தொண்டைமானாறு உவர் நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள் உருக்கினால் ஆனவை என்பதால் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத கறையில் உருக்கினாலான மடைக்கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்படவுள்ளது. தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி மழைநீரைச் சேகரிக்கும்போது தாழ்வான வயல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. இதனைத் தடுக்கும் நோக்குடன் இரு இடங்களில் வெள்ளத்தடுப்பணைகளும் கட்டப்படவுள்ளன. சீமெந்துக் கட்டுமானப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளுக்கென 99 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்புனரமைப்பு வேலைகள் யாவும் 2வருடங்களில் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், ஈ.சரவணபவன் ஆகியோரும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வே.பிறேமகுமார், பிரதி பணிப்பாளர் ந.சுதாகரன், பிரதிப் பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை-

courtsஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை கண்டியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தையும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வைத்துக் கொள்ளுமாறு, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் கசீம் ஆகியோருக்கு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது. கண்டி தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கோரிக்கையை கருத்தில் கொண்டே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பாத யாத்திரை செல்வோர் மாவனெல்லை நகரைத் தவிர்த்து தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, மாவனெல்ல நீதவான் என்.கே.மஹிந்த இன்று உத்தரவிட்டுள்ளார். மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் மாற்று வீதிகளைப் பயன்படுத்தி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயம் திருந்த தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்-நீதிபதி இளஞ்செழியன்-

ilancheliyanசமுதாயத்தில் நடைபெற்றுவரும் குற்றச்செயல்கள் குறைவடைந்து, குறுகிய காலத்தில் சமுதாயம் திருந்த வேண்டுமாயின் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் இவ்வாறு யாழ். நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து, சட்டரீதியான நீதிக்கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலொன்று, நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் நடைபெறும் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதால், சம்பந்தப்பட்டவர்களின் நடத்தையில் மாற்றம் ஒருபொழுதும் ஏற்படாதென்றும், சமுதாயத்தை திருத்துவதற்கு தண்டனை ஒன்றே சிறந்த வழி என்றும் நீதிபதி இளஞ்செழியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது, ஏனையோருக்கு குற்றச்செயல்கள் தொடர்பில் சிந்திப்பதற்கு கூட கால அவகாசம் வழங்காத வகையில் அமையவேண்டுமென அவர் மேலும் கூறியுள்ளார். ஒழுக்கங்களை கற்றுத்தரும் பாடசாலைகளில், மாணவர்கள் மீது இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், பாடசாலையில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, அதுகுறித்த விசாரணைகள் கிரமமான நடைபெற வேண்டுமென இதன்போது அதிபர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

புன்னாலைக்கட்டுவன் வடக்கு மாதர் சங்கத்திற்கு சுழற்சிமுறை கடனும், சனசமூக நிலையத்திற்கு தளபாடங்களும் பா.உ த.சித்தார்த்தன் வழங்கிவைப்பு- (படங்கள் இணைப்பு)-

P1380550யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு மாதர் சங்கத்தினருக்கு சுழற்சிமுறைக் கடன் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முன்னைய மாகாணசபை உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணத்தின்மூலம் மேற்படி சுழற்சிமுறை கடன் வழங்கப்பட்டது. புன்னாலைக்கட்டுவன் வடக்கு அபிவிருத்திச் சங்கத் தலைவர் கெங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுழற்சிமுறைக் கடன் வழங்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களனின்; பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து புன்னாலைக்கட்டுவன் வடக்கு சனசமூக நிலையத்திற்கான தளபாடங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

வடக்கில் குளங்களை அபிவிருத்தி செய்ய ஜப்பான் உதவி-

japanமகாவலி அதிகாரசபையின் ஊடாக வடக்கில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்கா அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனை மஜிப் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியகபூர்வமாக விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இன்று மாகாண பணிப்பாளர் அலுவகத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர், வடக்கில் தற்போதைய விவசாய நிலைமைகள் மற்றும் அவற்றின் ஊடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படும் குளங்களின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இச்சந்திப்பில் மாகாண சபையின் உறுப்பினர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு செயற்றிட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

சுவிஸ் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது-சுவிஸ் தூதுவர்-

swissசுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது. ஆனால் அதிகார பகிர்வை, ஓரு நாட்டை பிளவுபடுவதும் அலகாக கருத்துப்பட கூறுவது தவறானது. உலகில் ஐம்பதற்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார். போரின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால் கடந்த கால மோதல்களுக்கு தீர்வுகாண அவை போதுமானதல்ல. மாறாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதுவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தற்போதுள்ள இலக்குகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கும் – சுவிஸர்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் இவற்றை கூறியுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவம் நிறுத்தப்படாது-பாதுகாப்புச் செயலர்-

karunasenaயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பிற்காக, இராணுவத்தினரை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தெற்கின் சில தரப்பினர் இந்தப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலோ அல்லது அதன் வெளியிலோ இடம்பெறவில்லை என பாதுகாப்பு செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க……. Read more

ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-

P2யாழ். ஆனைக்கோட்டை உயிரப்புலம் ஐக்கிய சனசமூக நிலைய அடைக்கலநாயகி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நேற்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளியின் தலைவர் பரஞ்சோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, கௌரவ விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் சற்குணராஜா, ஆர்.கே. ரட்ணராஜா ஆகியோரும், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக புனித அடைக்கலநாயகி தேவாலய பங்குத்தந்தை, அருட்சகோதரி புனிதராணி, நவலட்சுமி சந்திரகுமார் (அதிபர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன. Read more

துளிசிகனின் இரத்த சாசனம் குறும்படம் வெளியீட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-

Kurumpadam 24.07.2016 (1)உ.துளசிகனின் இரத்தசாசனம் என்னும் குறும் திரைப்படம் வெளியீட்டு நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ். வலிகாமம் தென்மேற்கு குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தெற்கு பிரதேச செயலக அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து மேற்படி குறும் திரைப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல சிறார்களுக்கு காலணிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

l1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த குழந்தைச்செல்வம் த.அர்ச்சனா அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பார்வையிழந்த செவிப்புலன் இழந்த வாய்பேச முடியாத மாணவர்களை பராமரிக்கும் இல்லமான இனிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த 49 சிறார்களுக்கு காலணிகளை வழங்கிவைத்துள்ளார். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் இனிய வாழ்வு சிறார்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 21.07.2016 அன்று இப் பொருட்கள் மாணவர்களிடம் கையளிக்கபட்டுள்ளது. இந் நிகழ்வில் குழந்தை அர்ச்சனாவை மகிழ்விக்கும் முகமாக இனிய வாழ்வு இல்ல சிறார்களினால் பல நாட்டியம் மற்றும் கண்பார்வையிழந்த செல்வி.தமிழினியின் இனிய குரலில் பாடலும் இடம்பெற்றது. இக் கைங்கரியத்தை ஆற்றிய குழந்தை செல்வம் அர்ச்சனா சீரோடும் சிறப்போடும் பல்லாண்டுகாலம் பல கலைகளும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை பிராத்திப்பதோடு Read more

வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்-கனடா-

cafsஉண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்குமென கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார். “கனேடிய தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் நினைவுகூரும், 1983 கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்கிறது. தமிழர்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போதும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அதேவேளை, தமது குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்களுக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் நீதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்தை கனடா தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும் கனேடியப் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் மாற்றமில்லை-ஐரோப்பிய ஒன்றியம்-

europ1இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளக விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது. இருதரப்பினராலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஐ.நா ஆணையாளரின் இலங்கை தொடர்பான யோசனைக்கு ஏலவே ஆதரவு வழங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாகி போல் கோட்பிரே, அதனடிப்படையில் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், விசாரணை பொறிமுறை குறித்த இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போல் கோட்ப்ரே தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்-எம்.கே.சிவாஜிலிங்கம்-

sivajiதமிழினப் படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமென, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் கடந்த 1983ல் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டதாக 53 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்டோரை நினைவுகூரும் வகையில், இன்றையதினம் தமிழ் தேசிய வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றுகாலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நினைவுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியபின், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்தோடு, தமிழ் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையில் ஓர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென இதன்போது குறிப்பிட்ட அவர், அதனை வெற்றிகொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

கீரிமலை இறங்குதுறை அமைக்கும் கடற்படையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு- 
 
M3யாழ். கீரிமலையில் இறங்குதுறையொன்றைக் கட்டுவதற்கான பணிகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அங்கு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சைவசமய பெரியார்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து நடத்தியிருந்தார்கள். கீரிமலை புனித பிரதேசம் மாத்திரமல்லாது கடற்படை அமைக்கின்ற இறங்குதுறையானது மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவே உள்ளது. அத்துடன் இச்சுற்றாடலிலே பல சித்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன. இறங்குதுறையை அவற்றுக்கு முன்பாக அமைத்தால் அங்கு மீன்பிடி தொழிலுக்கென வருவோர்க்கும் சிரமம். அது ஆலயப் புனிதத் தன்மையையும் கெடுக்கும். அத்தோடு அங்கு மீன்பிடி சமூகமும் இல்லை. மீன்பிடித் தொழிலும் நடைபெறுவதில்லை. இதற்கு முன்பும் மீன்பிடித் தொழில் அப்பகுதியில் நடைபெற்றதில்லை. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத் தலைவர் ஆறுதிருமுகன், கீரிமலை ஆலய குரு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

Wushu Sanda தேசிய மட்ட போட்டியில் மகேந்திரராஜா பிரவீந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்-(படங்கள் இணைப்பு)-

M.Praveenth 16-17.07.2016 (30)மாத்தறை உள்ளக விளையாட்டரங்கில் இம்மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் (2016) Wushu Sanda போட்டியில் திரு. மகேந்திரராஜா பிரவீந்த் அவர்கள் வடமாகாணம் – வவுனியா மாவட்டம் சார்பாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்படி Wushu Sanda போட்டியிலே முதன் முறையாக வட மாகாணத்திற்கான தேசிய மட்ட பதக்கத்தினை இவரே பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் 2016 மாகாணமட்ட தேசிய மட்ட ஜூடோ (Judo) போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2016 மாகாண மட்ட மல்யுத்தப் (Wrestling) போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தார். மேலும் 2016 அம்பேபுஸ்ஸ சிங்க ரெஜிமென்ட் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்ட Wushu Sanda போட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Read more

கிணற்றிலிருந்து தாயும், மகளும் சடலங்களாக மீட்பு, தந்தையும் உயிரிழப்பு-

murderமட்டக்களப்பு வெல்லாவெளி, காக்காச்சிவெட்டை கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து குழந்தை உட்பட இருவரது சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் பெண்ணின் தந்தையார் அடிகாயங்களுக்கிலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். காக்காச்சிவெட்டை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பிரசாந் விஜிதா மற்றும் அவரது மகளான ஒன்றரை வயதுடைய பிரசாந் சஸ்மி ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த தாயும் குழந்தையும் இன்று அதிகாலை முதல் காணாமற்போயிருந்த நிலையில் குறித்த இருவரும் கிணற்றில் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இதேவேளை உயிரிழந்த விஜிதாவின் தந்தையான 56 வயதுடைய பேரின்பராசா என்பவர் பலத்த அடிகாயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த விஜிதாவின் கணவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் தனிமையிலிருந்த சங்கானை சிறுவன் மீட்பு-

boyயாழ். சங்கானையை சேர்ந்த சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் சங்கானை சுழிபுரத்தை சேர்ந்த 11 வயதுடைய கரிகாலன் சுதர்சன் என்ற சிறுவனே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் தனியாக இருந்ததை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் அந்த சிறுவனிடம் வினவியபோது, தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து சிறுவனை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிறுவன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருக்கின்றான்.

ஜப்பான் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை-

japanஜப்பானின் ‘இனசுமா’ மற்றும் ‘சுஸ_ட்சுகி’ எனும் இரண்டு போர்க்கப்பல்கள், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. நல்லெண்ண அடிப்படையிலேயே குறித்த போர்க்கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்கள், கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டன. குறித்த கப்பல்கள் நாளை ஜப்பான் திரும்பவுள்ள நிலையில், இரு நாட்டு கடற்படைக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்தை பகிர்ந்து, நட்புணர்வை வளர்க்கும் நோக்கில், சில பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொக்காவில் விபத்தில் இருவர் உயிரிழப்பு-

accமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இன்றுமாலை 4.30அளவில் இடம்பெற்ற விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த அல்பட் ஜெயக்குமார் (வயது 24) மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் பலியாகியுள்ளனர். அவர்களின் ஒன்றரை வயது குழந்தை காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மினி பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விருவரும் பலியாகியுள்ளனர். மினி பஸ்சின் சாரதி தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும், அவரை பொலிசார் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.