மூன்று அமைச்சுக்களுக்கு புதிய செயலர்கள் நியமனம்-

sri lankaஅமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்றுமுற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அப் பதவியில் இருந்த சித்ராங்கனி வாகீஸ்வர டெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டதுடன் அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளதுடன் தபால் சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக் கடிதங்களை வழங்கிவைத்ததன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேன, புதிதாக நியமனம் பெற்றுள்ள செயலாளர்களுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்-

thondarநிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இன்றுகாலை 09.30 அளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடிய அவர்கள், பின், ஆளுநர் செயலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர். வட மாகாணத்தில் 1300 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவுகளுமின்றி சேவை செய்து வருகின்றார்கள். பல போராட்டங்களை முன்னெடுத்தும், எந்தவித முடிவுகளும் கிடைக்காத நிலையில், வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், நல்லூர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, துணுக்காய், தீவகம் உள்ளிட்ட 12 வலயத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். இதேவேளை, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு, போராட்டம் செய்ய வேண்டாமென்று ஆளுநர் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார், குறித்த தொண்டர் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். முற்றுகைப் போராட்டத்தினை முன்னெடுத்தால், ஆளுநர் அலுவலகத்திற்கு வரமாட்டார் என்றும் பொலிஸார் வாயிலை விட்டு ஒதுக்குப் புறமாக நின்று போராட்டத்தினை முன்னெடுக்குமாறும் கூறினார். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத தொண்டர் ஆசிரியர்கள், தமக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வரையில், வாயிலை விட்டு செல்ல முடியாது, என்று வலியுறுத்தினார்கள். இதன்படி, எந்தவித கொடுப்பனவுகளுமின்றி, குடும்ப சுமைகள், மற்றும் மன அழுத்தங்களுடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும், தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குமாறும் வலியுறுத்தி தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தேசியரீதியில் வவுனியா மாணவி சங்கவி கனகரட்ணம் முதலிடம்-

saivapragasa VNA studentவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் 11 இல் கல்விகற்கும் மாணவி செல்வி சங்கவி கனகரட்ணம் 2016.07.09 அன்று கல்வி அமைச்சு, இசுறுபாயவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரையாக்கமும், இலக்கிய நயத்தலும் போட்டி பிரிவு (4) இல் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் வடமாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழித்தின உறுப்பெழுத்து (print script writing) போட்டியில் தரம் 11 இல் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் சிங்கள மொழித்தின போட்டியிலும் தேசியமட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இவர் பாடசாலைக்கும், வவுனியா மாவட்டத்துக்கும் பெருமையீட்டித் தந்துள்ளமையால் பாடசாலை அதிபர் திருமதி.க. பாக்கியநாதன் அவர்களும் பாடசாலைச் சமூகமும், வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ்.அன்ரன் சோமராஜா அவர்களும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க….

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தீவிரம்-

Colomboதங்களின் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் கடுமையாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தங்களின் கோரிக்கைளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காததன் காரணமாக தொடந்தும் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

மாந்தை மர்மக் கிணறு நீதவான் முன்னிiலில் தோண்டப்பட்டது-

Mannarமன்னார் மாந்தை மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம கிணறு இன்றுகாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெ க்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது. குறித்த மர்மக்கிணறு தொடர்பாக வழக்கு விசாரனை இன்றுகாலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது காணாமற் போனவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் மன்றிற்கு பிரசன்னமாகியிருந்தனர். இதன்போது அழைக்கப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததோடு மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் டபிள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஸ அவர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான குறித்த மர்மக்கிணற்றை தோண்ட உத்தரவிட்டார். இந்நிலையில் இன்றுகாலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த கிணறு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. முதலில் குறித்த கிணறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் எவையும் காணப்படுகின்றதா என்பது குறித்து விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் நீதவான் முன்னிலையில் குறித்த மர்ம கிணறு தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக காலை 10.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குறித்த மர்ம கிணறு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிறு எலும்புத்துண்டுகள் இரண்டு அகழ்வின்போது மீட்கப்பட்டன. குறித்த அகழ்வு நடவடிக்கைகளின்போது மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் டபிள்யு. ஆர்.எஸ்.ராஜபக்ஸ அழைக்கப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், காணாமல்போன உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், ரனித்தா ஞானராஜா, மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எம்.சபூர்தின், பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.