உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு தீர்மானம்-


urban councila and local govern2012ம் இலக்க 22வது உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இது குறித்து கலந்துரையாடல்களை நடாத்தி அமைச்சரவைக்கு பணிப்புரையை சமர்ப்பிப்பது தொடர்பில், அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குழுவின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

முன்னாள் போராளிகளின் மரணம், சர்வதேச மருத்துவக்குழு ஆய்வுக்கு கோரிக்கை-

sadsdsஇறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தொடர் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவர்களது உறவினர்கள், இதுகுறித்து சர்வதேச மருத்துவக் குழுவினால் ஆய்வுசெய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் இன்று நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களது கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஒருவர், இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அத்தோடு, முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டுவரும் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றும், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் இதன்போது பலர் கருத்துத் தெரிவித்தனர். மேலும், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படாமல் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வட்டுவாகலில் படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு-

vadduvahalமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதற்காக நாளையதினம் நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை அரச நில அளவையாளர் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். நாளைகாலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிலஅளவை நடவடிக்கை, 5ஆம் திகதிவரை தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே. குறித்தபகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும் இடத்திற்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த விடயத்தினை கேள்வியுற்ற முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க…
வடமாகாண தொண்டராசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது-

thondarடமாகாண தொண்டராசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். கச்சேரியடியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்றுக்காலை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தங்கள் நியமனத்துக்கான பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே தொண்டராசிரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாணத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாரந்தணை பகுதியில் இருந்து மாணவனின் சடலம் மீட்பு-

dead.bodyயாழ். ஊர்காவற்றுறை நாரந்தணை 8 ஆம் வட்டாரப் பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சரவணை மேற்கு 1ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் நேற்று முதல் காணாமற்போயிருந்த நிலையிலேயே, இன்று வெற்றுக்காணியிலுள்ள மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவனின் இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைகளை மேற்கொண்டார். அத்துடன், தடய அறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சுங்க உத்தியோகஸ்தர்களுக்கு இராணுவப் பயிற்சி-

kilinochiசுங்கத் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய புதிதாக நியமனம் பெற்ற சுங்க உத்தியோகஸ்தர்களுக்கு இராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது இதன்படி புதிதாக நியமனம் பெற்ற 97 சுங்க அதிகாரிகளுக்கு ஐந்து வாரகால பயிற்சி கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தின் கீழுள்ள 57வது படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அம்பகாமம் இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூன் 18ம் திகதி முதல் ஜூலை 26ம் திகதி வரையான இப் பயிற்சியின்போது இராணுவம், பொலிஸ் மற்றும் வேறு பலர் இந்த சுங்க அதிகாரிகளுக்கு விரிவுரைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான பயிற்சிப் பிரியாவிடை நிகழ்வு கடந்த ஜூலை 26ம் திகதி அம்பகாமம் இராணுவ பயிற்சி முகாமில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் சூலானந்த பெரேரா மற்றும் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக நியமனம் பெற்ற சுங்க அதிகாரிகளில் 10 பெண் அதிகாரிகளும் இந்த பயிற்சிநெறியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

முல்லைத்தீவில் நல்லிணக்க பொறிமுறை கலந்தாலோசனை-

sadsdமுல்லைத்தீவில் போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று ஆரம்பமானது. செயலணி, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.. இந்நிகழ்வில் பொதுமக்கள் தமது கருத்துக்களை ஆர்வமாக முன்வைத்துள்ளனர். காணாமற் போனோர் தொடர்பாக, ஊனமுற்றோர்களுக்கு உதவித்திட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு, பொலிஸ்பிரிவை மாற்றி அமைத்தல், காணி பிணக்குகளை இலகுவாக தீர்த்தல், தண்டனை சட்டங்களை மாற்றி கூடுதலான தண்டனையை விரைவாக வழங்குதல், மனிதஉரிமைகள் மீறுதல், உண்மை நீதியை கண்டறிய விசேட நீதிமன்றம் அமைத்தல், தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படாமல் தடுத்தல், சீரான கல்வி வழங்குதல், இளைய சமுகத்தை சீராக்குதல், போன்ற பல்வேறு விடயங்களை இதுவரை பொதுமக்கள் தமது கருத்துக்களாக முன்வைத்துள்ளனர். குறித்த பொறிமுறை மனோரி முத்தெட்டுகம தலைமையிலான விசேட செயலணி நடத்துகின்றது. கடந்த ஜனவரி 26ம் திகதி தொடக்கம் சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுகம தலைமையில் 11பேரைக் கொண்ட செயலணி பொதுமக்களிடம் கருத்துக்களை அறிந்து வருகின்றது. இதற்கமைய கடந்த வாரம் முதல் இந்த கருத்தறியும் செயற்றிட்டம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வெலிக்கடை சிறை முன்பாக போராட்டம்-

sdfdfdபயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் படுகொலைக்கு நீதி கோரியும், எதிர்வரும் 8ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின், 4ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்ட அவர், அன்றைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறும் வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க முன்வர வேண்டும் என்றும், அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஹேமந்த வர்ணகுலசூரிய நியமனம்-

dssஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஹேமந்த வர்ணகுலசூரிய இதற்கு முன்னர் இத்தாலி, மோல்டா, சைப்ரஸ், எல்பேனியா போன்ற நாடுகளுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருக்கேதீஸ்வரம் பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு-

dsfdsfdமன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில உறுப்புக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கிணறு தோண்டப்பட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் 96 மனித எச்சங்கள் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன. அந்தப் பகுதிக்கு அருகிலேயே இந்த பாழடைந்த கிணறும் இருந்துள்ளது. மேலும், குறித்த கிணற்றைத் தோண்டும் பணிகள் இன்றும் தொடர்கின்றன.