திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் கிணற்றில் அகழ்வுப் பணிகள் நிறைவு

 tirukedheeswaramதிருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ராஜபக்ச தெரிவித்திருக்கினறார்.

கடந்த திங்கட்கிழமை இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் பதினைந்து அடி ஆழம் வரையில் அகழப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்து சில எலும்புகள், பல் ஒன்று நாணயம் ஒன்று உட்பட பல தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.இந்தத் தடயப் பொருட்கள் இரசாயன பகுப்பாய்வு செய்யப்பட்டு, அது தொடர்பில் மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார் டாக்டர் ராஜபக்ச.

திருக்கேதீஸ்வரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளின்போது பணியாளர்களினால் மனித எலும்புகள் சில கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, சுமார் 80 பேருடைய மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டு பரிசேததனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைளின்போது, அந்த மனிதப்புதைகுழிக்கருகில் மூடப்பட்டிருந்த பழைய கிணற்றின் உள்ளேயும் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என காணாமல் போனோருடைய உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்தக் கிணற்றில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்ததையடுத்தே இந்த அகழ்வுப் பணிகள் நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதற்கிடையில் காவல்துறையினருடைய பாதுகாப்பில் உள்ள இந்தக் கிணற்றை பொறுப்பெடுத்து, அதனைச் சுத்தப்படுத்தி பொதுமக்களின் பாவனைக்கு விடுமாறு மன்னார் மாவட்ட நீதவான் மன்னார் பிரதேச சபையினருக்கு உத்தவிட்டு இந்த வழக்கு விசாரணையை செப்டம்பார் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.