31வது ஒலிம்பிக் பிரேசில் ரியோ நகரில் தொடங்கியது
 
olympics31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனெரோவில் பிரமிக்கத்தக்க தொடக்கவிழா வைபவத்துடன் தொடங்கின.

ரியோ நகரின் மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பிரேசிலின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தையும், அதன் பிரசித்திபெற்ற சுற்றுச்சூழலையும் வெளிக்காட்டும், ஒளி, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தேறின.சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த 10,000 தடகள வீரர்கள் , உற்சாகமாகக் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் அணிவகுத்துச் சென்றார்கள். உலகின் பல பாகங்களில் அகதிகளாய் வாழ நேர்ந்திருப்போரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு சிறிய குழு ஒன்றும் பெரும் ஆரவார வரவேற்பைப் பெற்றது.

பகிர்ந்து கொள்ளப்பட்ட மனிதநேயம் என்ற ஒலிம்பிக் விழுமியங்கள்தான் உலகில் காணப்படும் நெருக்கடி, நம்பிக்கையின்மை மற்றும் நிச்சயமற்றநிலை ஆகியவற்றுக்கான பதில் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கூறினார்.

பிரேசிலின் இடைக்கால அதிபர் மிஷேல் டெமெர் ஒலிம்பிக் போட்டிகளை முறையாகத் தொடங்கிவைத்த போது அவருக்கெதிராக எழுந்த சில கேலிக்குரல்கள், பிரேசிலில் நிலவும் ஆழமான அரசியல் நெருக்கடியை நினைவுபடுத்தின.