போர்க்குற்ற விசாரணை: சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

fig-17போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவர்களா? என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீபவன் இதனை அறிவித்தார்.

போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதுவரை இந்த தகவலை நிராகரிக்க தவறியுள்ளது.

எனவே, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் இது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அந்த சட்டம் இதுவரை அமூல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே இந்த மனுவை முன்கொண்டு விசாரணை செய்ய முடியாதென்று கூறிய அரச தரப்பின் வழக்கறிஞர் அதனை தள்ளுப்படி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்வதாக அறிவித்தனர்.

முன்னாள் போராளிகள் குறித்த சர்ச்சை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பதில்

current shockபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கு இவ்வாறு இரசாயன ஊசியை உடலில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து, நேற்றையதினம் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல் நிலையை சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் குறித்த பிரேரணையினை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனுமதி

dayamaster1விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தான் சுற்றவாளி என தெரிவித்ததையடுத்து, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.எனினும், சரீரப் பிணையாளிகளை நீதிமன்றம் நேரில் பார்வையிட வேண்டும் என தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், அந்தப் பிணையாளர்களை நாளை 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் இந்த வழக்கின் எதிரியாகிய தயா மாஸ்டரை வவுனியா சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களை ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவிடாமல், விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களாகிய இளம்பரிதி மற்றும் திலக் ஆகியோருடன் இணைந்து தடுத்ததாக தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தி வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டிற்கு தான் சுற்றவாளி என தயா மாஸ்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விளக்கத்திற்கு நியமிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதி, இவர் முன்னதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு, இவரைப் பிணையில் செல்ல அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் வரையில் வடமாகாணத்தை விட்டு அவர் வெளியில் செல்லக்கூடாது.

ஒவ்வொரு நாளும் யாழ் தலைமையக போலீஸ் நிலையத்தில் காலை 9 மணிக்கும், பகல் 12 மணிக்கும் இடையில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து, 5 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆயினும், சரீரப் பிணையாளர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என்பதற்காக அவரை அது வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராகிய தயா மாஸ்டரையும் இராணுவத்தினர் கைது செய்திருந்தனர்.

பின்னர் இருவரையும் பிணையில் செல்ல நீதிமன்றத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜார்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.