அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை இம் மாதம் 22-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், ஜாமீன் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை சசிகலா புஷ்பா அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 1-ம் தேதி, சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது வீட்டில் பணிப்பெண்களாக இருந்தவர்கள் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்தார். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நேற்று புதன்கிழமை இதுதொடர்பான விசாரணை நடந்தபோது, ஏற்கெனவே சசிகலா தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துவிட்டது என்றும், அவரது மனுவை விசாரிக்க டெல்லி நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்ரமணிய பிரசாத் வாதிட்டார்.
ஆனால், இது புதிய வழக்கு என்றும், மேலும் 200 – 300 வழக்குகள் கூட பதிவு செய்யப்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனால், கோபமடைந்த நீதிபதி முக்தா குப்தா, நீதிமன்றத்துக்கு தவறான தகவலைத் தந்து திசை திருப்பக் கூடாது என்று தமிழக அரசு வழக்கறிஞரைக் கடிந்து கொண்டார். மேலும், சசிகலா புஷ்பா மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இன்று வியாழக்கிழமை, அதுதொடர்பான விவாதம் தொடர்ந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜரானார். இந்த மனுவை விசாரிக்கவும், ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்று அவரும் வாதிட்டார்.
ஆனால், நீதிபதி அந்தக் கருத்தை ஏற்கவில்லை. இந்த மாதம் 22-ம் தேதி வரை சசிகலா புஷ்பாவைக் கைது செய்யக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், முழுமையான ஜாமீன் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
திமுக எம்.பி. திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. அதையடுத்து, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சசிகலா புஷ்பா சந்தித்தார். பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, திமுகவினரிடம் மன்னிப்புக் கேட்டார். மேலும், தங்கள் கட்சித் தலைவர் தன்னைக் கன்னத்தில் அறைந்ததாகவும் புகார் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அப்போதே அறிவிக்கப்பட்டது.