யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்-

unesco chairmanயுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா பொகோவா நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரினா பொகோவா அந்த அமைப்பின் பணிப்பாளராக நியமணம் பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2030ம் ஆண்டில் இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இரினா பொகோவாவின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் எஸ்.பி நாவின்ன உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுதவிர சீகிரியா உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க 08 இடங்களில் கண்காணிப்பு விஜயத்தினையும் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில் ஆகஸ்ட் 16ம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடலிலும் இரினா பொகோவா பங்கேற்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் விரைவில் மீளாய்வு-

sri lankaஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் விசேட ஏற்பாடுகள் தொடர்பில் குறித்த திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இவ் பரிந்துரைகள் தொடர்பில் ஏற்கனவே சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான துணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்மூலமானது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் தேவைகளை கண்டறிந்து அரசு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பல கடமை பொறுப்புக்களை விதந்துரைக்கின்றது. மேலும் தென்னாபிரிக்க அரிசியலமைப்பின் 198 ஆவது சரத்தின்படி தேசிய பாதுகாப்பு தொடர்பாக துணைக்குழுக்களின் அவசியம் தொடர்பிலும் தனி நபர்கள் அரசுக்கு ஆற்றவேண்டிய கடமைப் பொறுப்புக்களையும் தெளிவாக விளக்குகின்றது. தனி மனிதர்கள் தேசமாக சமத்துவத்தோடு வாழ்வதற்காகவும், சுமுகமான வாழ்வுக்கான தேவைகளையும் வரையறுக்கின்றது. இது சர்வதேச சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற துணைக்குழு மற்றும் தேசிய அதிகாரத்துடனான பரப்புகளை கூறுகின்றது. மேலும் இலங்கை மனித உரிமைகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 4ஆம் சரத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்டையில் தேசிய பாதுகாப்பிற்கான தேவையினை அவசியம் பூர்த்திசெய்யவேண்டும்.

காணாமற் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு-

kiriyellaகாணாமற் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமற் போனோர் அலுவலகம் குறித்த சட்டம், சட்டவிரோதமானது என்றால் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கலாம். எனினும் எவரும் நீதிமன்றிற்கு செல்லவில்லை. கடந்த மே 22ஆம் திகதி இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்றின் உதவியை நாடக்கூடிய கால அவகாசம் காணப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் நடுவில் காணப்படும் குழி போன்ற பிரதேசத்தில் நின்றுகொண்டு கூச்சல் இட்டதில் பயனில்லை. சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறு சபாநாயகர் கோரியிருந்தார். சிலர் செங்கோலை பறித்துச் செல்ல முயற்சித்தனர். காணாமற் போனோர் தொடர்பில் நல்ல விவாதம் ஒன்றை நடத்த சந்தர்ப்பம் இருந்தது. இவ்வாறான ஓர் சட்டமூலம் முதல் தடவையாகவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் மேலதிக காலத்தை வழங்கவும் இணங்கப்பட்டிருந்தது. 87, 89 மற்றும் 71ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியும் பேச அவகாசமிருந்தது. தமது பிள்ளைகள் வீடு திரும்புவார்கள் என இன்னமும் தாய்மார் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டியது எமது கடமையாகும், இவை பற்றி விவாதத்தில் பேசியிருக்கலாம். எனினும் கூட்டு எதிர்க்கட்சி அதனை குழப்பி விட்டது என லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆக்கிரமிப்பினால் வீடு செல்லமுடியாத நிலையில் தையிட்டி மக்கள்-

thaiyittiயாழ். தையிட்டி தெற்குப் பகுதியினை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பாதிகப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலி. வடக்குப் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சில பகுதிகள் இராணுவத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுக்கப்பட்டன. தையிட்டி தெற்குப் பகுதியும் கடந்த வருட இறுதியில் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டது. அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறி வருகின்றனர். அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் தையிட்டி தெற்கு விடுவிக்கப்பட்டு 8 மாதங்கள் கழிந்துள்ளபோதும் தையிட்டி பிரதான வீதி இன்னமும் இராணுவம் வசமே உள்ளது. இந்த வீதியை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதால், வீட்டு வளவுகளின் ஊடாகவே தம் வீடுகளுக்கு மக்கள் செல்ல முடிகிறது. இதனால் சொந்த நிலம் விடுவிக்கப்பட்டும் சொந்த வீட்டுக்கு சுதந்திரமாக செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலை நீடிப்பதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இந்த வீதியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்துத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்-

paravipanchanஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற நிலையை அடுத்து இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, இம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்திருந்தார். எனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றையதினம் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மடுமாதா திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை-

trainமடுமாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. நாளை மறுதினம் பிற்பகல் 3.30 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள விசேட ரயில், இரவு 10.18 இற்கு நீர்கொழும்பை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி முற்பகல் 10.45ற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள மற்றுமொரு விசேட ரயில், மாலை 6.51 இற்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக நாளாந்தம் கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மடு யாத்திரையில் ஈடுபடுகின்றவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகளை மடு ரயில் நிலையத்தில் ஏற்படுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, மன்னார் மடுமாதா திருத்தலத்தின் பெருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 6 ஆம் திகதி முதல் கொடியேற்றத்துடன் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறவுள்ள பெருவிழா தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி காலை கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.