பிரதமர் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் சந்திப்பு-

ranilசீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு இன்றுமாலை இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர், அந்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை நேற்று மாலை கண்காணித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் சீன பாசிசவாதத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்ததாக கருதப்படும், ஸ்ட்ப்வெல் அருங்காட்சியகம் மற்றும் சீனாவின் முதலாவது பிரதமரான ஜூ என்லாயின் வீடு மற்றும் அலுவலக வளாகத்தையும் தூதுக்குழுவினர் கண்காணித்துள்ளனர். சீனாவின் சோஜிங் நகரின் நகர மேயர் ஹ_அங் ஜிவான் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பொன்றும் நேற்றுமாலை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது. வீடமைப்பு மற்றும் சொத்து வலயமாக கட்டியெழுப்பப்படவிருந்த கொழும்பு துறைமுக நகரை, நிதி நகரமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதை ஹ_அங் ஜிவான் வரவேற்றதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

யாழ்- கொழும்பு புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு-

trainயாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரதங்கள் மீது தொடர்ந்தும் கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்று ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றின் மீது கொழும்பின் புறநகர் ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தை சேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தூரச்செல்லும் புகையிரதங்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்களின்பாதுகாப்பு நேற்றையதினம் முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் சமூகநலத் திட்டங்கள் சிறந்த முன்னுதாரணம்-நோர்வே பிரதமர்-

norway prime ministerயுத்தத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலத்திட்டங்கள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பர்க் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அவர் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவ்வாறான திட்டங்கள் ஏனைய நாடுகளின் கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இதன்போது இலங்கையில் இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் குறித்து தமது பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் மிரிஸ்ஸவில் அமைந்துள்ள கடற்றொழில் துறைமுகத்தை பார்வையிட்ட அவர், அபிவிருத்தி தொடர்பில் தேவையான வசதிகளை தாம் பெற்று தருவதாகவும் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பொதுச்சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு-

maithripalaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார். அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17 ஆவது உச்சி மாநாடு செப்ரெம்பர் 17, 18ஆம் திகதி களில்வெனிசுவேலா நாட்டின் கராகஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது அமர்வில் வரும் 21ஆம் நாள் உரை யாற்றுவதற்காக ஜனாதிபதி நியூயோர்க் செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து வரும் ஜனவரி மாதம் விலகவுள்ள பராக் ஒபாமா, ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தவுள்ள கடைசி உரை இது என்பதாலும், 10 ஆண்டுகளாக ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்த பான் கீ மூன், இந்த ஆண்டு இறுதியுடன் ஓய்வுபெறவுள்ளதாலும், 71ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காணாமற்போனோர் விசாரணை அறிக்கை ஜனாதிபதி செயலரிடம் கையளிப்பு-

140129160658_missing_people_commission_304x171_bbc_nocreditகாணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணை அமர்வுகளில் தங்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் தொடர்பான தகவல்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். இரண்டரை வருடங்கள் செயற்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் கடந்த ஜூலை 15ம் திகதி நிறைவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுமார் 6400 சாட்சியங்களை விசாரணை செய்திருந்தனர். பொதுமக்களிடமிருந்து 19000 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 4800 முறைப்பாடுகள் போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு பிரிவில் 5400 பேர் காணாமற்போயுள்ளமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமற் போனோர் சட்டம் நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வு-பிரிட்டன்-

britishஅரசாங்கத்தினால் காணாமற்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வாக கருதப்பட முடியும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அலுவலகம் ஊடாக காணாமற்போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளது. தாம் நேசித்தவர்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், இதன் ஊடாக நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது. ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் அலுவலகம் நடவடிக்கை எடுக்கும் போது சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனை ஒப்புக்கொள்வதாக பிரித்தானியா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.