அமெரிக்க மருத்துவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்-

american doctorsஅமெரிக்கா, இலங்கை நாடுகளுக்கிடையில் நட்புறவு ரீதியான ஒற்றுமையினை வலுப்படுத்தும் முகமாக இன்று அமெரிக்காவின் 40 பேர் கொண்ட விசேட மருத்துவக் குழுவினர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த குழுவினர் ஐந்து நாட்களுக்கு யாழ். குடாநாட்டில் தங்கியிருப்பதுடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் நடமாடும் மருத்துவ சேவையிலும் கலந்து கொள்ளவுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளலாய் இடைக்காடு மகாவித்தியாலத்தில் இன்றுகாலை இடம்பெற்ற நடமாடும் மருத்துவ முகாமில் இந்த விசேட மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். குறித்த நடமாடும் சேவையில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மற்றும் பாதுகாப்புப் படைத்தலைமையக அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். எதிர்வரும் நாட்களில் ஊர்காவற்துறை, வேலணை, நெடுந்தீவு, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் குறித்த குழுவினர் சென்று அங்குள்ள மக்களுக்கும் நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமாலை நிலக் கண்ணிவெடி வெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்-

minesகிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வெடிப்புச் சம்பவங்களில் கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயமடைந்தததோடு, மற்றொரு சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார். முகாமலையில் ஆபத்து மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்துக்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற கிளாலியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். கண்ணிவெடி அகற்றப்படாத குறித்த பிரதேசத்துக்குள் சென்று வெடிப்பொருட்களை எடுத்து அதன் மருந்தை பிரித்தெடுத்து விற்பனை செய்யும் நோக்கில் இவர் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் இறந்த பகுதிக்கு டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு 29 வரையான ரங்கன் ரக கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது. இதன்போது அவரின் உடலின் அருகில் 15 வரையான கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை காணவில்லை என அவரது மனைவி, 13ம்திகதி பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் நேற்று சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முகமாலை பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த 45 வயதான கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த எஸ்.மகேஸ்வரி என்பவர் படுகாயமடைந்து யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். குறித்த பெண், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவருடைய ஒரு கண் முற்றாக இழந்த நிலையிலும் ஒரு கண் பாதிக்கப்பட்ட நிலையிலும் காலில் மிகப்பெரும் காயத்துடனும் மீட்கப்பட்டிருந்தார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை-

chandrikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்து ள்ளார். யுத்தத்திற்காக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி செய்துள்ளதாக, நேற்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வெளியிட்டிருந்தார். இந்த அபகீர்த்தியான கருத்துக்கு எதிராகவே இவ்வாறு கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது குறித்து தான் கோட்டாபயவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கம்மன்பில கூறியுள்ளார். அத்துடன், எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அந்த குற்றத்தை கோட்டாபயவின் மீது சுமத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபயவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட வேளை, இரசாயன ஊசி போடப்பட்டதாக கூறிய விக்ரமபாகு கருணாரத்னவைக் கைதுசெய்ய வேண்டும் எனவும், உதய கம்மன்பில இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச மீண்டும் கைது-

namalபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை றக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11ம் திகதி, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 18ம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நான்கு அமைச்சுக்களுக்கு பணிப்பாளர் நாயகங்கள் நியமனம்-

sri lankaஉடன் அமுலுக்கு வரும் வகையில் 4 அமைச்சுக்களுக்கு நிதி மற்றும் கணக்குகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகங்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுகாதாரம், கல்வி, பெருந்தெருக்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கு நிதி மற்றும் கணக்குகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளன. இலங்கை கணக்காளர் சேவையிலுள்ள தொழிற் தகைமையுடைய கணக்காய்வாளர்கள் இவ்வாறு நியமிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க அறிவித்துள்ளார். ஒரு வருடத்துக்கு 100 பில்லியன்களுக்கு அதிகளவில் செலவு செய்யும் அமைச்சுக்களுக்கு நிதி மற்றும் கணக்கு தொடர்பான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை சுகாதார அமைச்சுக்கு மேலுமொரு பணிப்பாளர் நாயகத்தை நியமிக்கும் தீர்மானத்திற்கு சுகாதார பணிப்பாளர் பாலித மகிபால உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாலித மகிபால ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். சுகாதார அமைச்சுக்கு நிதி விவகாரத்திற்கென புதிய பணிப்பாளர் பதவி அவசியமில்லையெனவும் இது தொடர்பாக கலந்துரையாட நேரமொன்றை ஒதுக்கி தருமாறும் அவர் ஜனாதிபதிக்கு கடிதம்மூலம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ திடீர் மரணம்-

former justiceஉயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ, தன்னுடைய வீட்டில் வைத்து இடம்பெற்ற விபத்தொன்றினை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூ, தன்னுடைய வீட்டின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து, களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைக்கு எடுத்துவரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவருகின்றது. தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரத் அப்றூவுக்கு, கடந்த ஜனவரி மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.