பரவிப்பாஞ்சான் நிலங்களை வழங்குமாறு கோரி தொடர் போராட்டம்-

paravipanchanகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியிலுள்ள இராணுவ முகாம் எல்லைக்குள் இருக்கும் தமது இடங்களை வழங்குமாறு கோரி, அப் பகுதி மக்கள் இன்று தொடர்ந்தும் நான்காவது நாளாக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 13ம்திகதி முகாமுக்கு முன்னால் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் தமது நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், குறித்த முகாமை அகற்றி தமது நிலங்களை பெற்றுக் கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அம் மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறையை ஹொரணையில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி கோரல்-

welikada jailகொழும்பு தெமட்டகொடையில் அமைந்துள்ள வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பகுதியில் அமைப்பது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் அதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரயில் மீது கல் வீசுவோர் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை-

stoningரயில் மீது கல் வீசுவோர் மற்றும் கல்வீச திட்டமிடுவோர் தொடர்பில் ரயில் திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் திகதி கொழும்பு-கோட்டையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில் மீது ஒருகொடவத்தை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று ரயில் பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பாளர் அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் காரணமாக ரயிலில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் காணவும் இதுபோன்ற சம்பவங்களை மோற்கொள்வோர் தொடர்பிலும் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0714 405 720 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸிக்கு படகில் சென்றவர்கள் விமானத்தில் திருப்பி அனுப்பிவைப்பு-

boatமட்டக்களப்பில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 6பேர், இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் தற்போது குடிவரவு – குடியகள்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 கடற்தொழிலாளர்கள் கடந்த ஜூலை 21ஆம் திகதி, வாழைச்சேனை கடல்வழியாக படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர். தொடர்ந்து 12 நாட்கள் படகில் பிரயாணித்த இவர்கள், அவுஸ்ரேலியா கடற்பரப்புக்குள் செல்லும்போது, படகு பழுதடைந்து 4 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவுஸ்ரேலியா கடற்படையினர் இவர்களை மீட்டு கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த படகையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், அவர்கள் அங்கிருந்து உடனடியாக விசேட விமானம் மூலமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு இன்று காலை 8.15 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதையடுத்து இவர்களை கைது செய்த விமான நிலையப் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.