ஜப்பானின் முன்னாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்திப்பு-

chandrika japan former prime ministerஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ புக்கூடோவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள பலமான பிணைப்பு மற்றும் நட்புறவு தொடர்பில் இந்த சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து ஜப்பானின் முன்னாள் பிரதமரிடம், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எடுத்துரைத்துள்ளார். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை நகர்ந்து வருகின்றமை குறித்து புக்கூடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு புக்கூடா அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் ஜப்பானின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் புக்கூடாவிற்கு சந்திரிக்கா அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் இலங்கை நட்புறவு சங்கம் மற்றும் ஆசியாவிற்கான போவாவோ மன்றம் ஆகியவற்றின் தற்போதைய தலைவராகவும் யசுவோ புக்கூடோ செயற்பட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு 26ஆம் திகதிவரை கால அவகாசம்-

voters list2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பெயர்பட்டியல் படிவத்தை பூரணப்படுத்தி ஒப்படைக்க முடியாது போனவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை காலம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்காக வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எனினும் பெயர்ப் பட்டியல் படிவத்தை ஒப்படைக்கத் தவறியவர்களுக்காக மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு சென்று குறித்த படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதனைப் பூரணப்படுத்தி கிராம சேவகரின் உறுதியுடன் மாவட்ட செயலக காரியாலயத்தில் அல்லது தேர்தல்கள் ஆணையக செயலக காரியாலயத்தில் ஒப்படைக்க முடியும். ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை இதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் 2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பெயர் பட்டியல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை-

swordயாழ். சங்குவேலி வடக்கு மானிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 30) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். வாள்கள் மற்றும் பொல்லுகள் சகிதம் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு அதிகாலை 1:30க்கு வந்த இளைஞர்கள் குழு இவ் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர். படுகாயங்களுக்குள்ளான இளைஞன், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பழைய பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக எம்.ஆர். லதீப் நியமனம்-

stf commanderசிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதிக்கான நியமனக்கடிதம் இன்றையதினம் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழு எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக கடந்த 9ஆம் திகதி நியமித்திருந்த நிலையில் இன்று அவருக்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எம்.ஆர். லத்தீப் 1979ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டிருந்தார். ஏற்கனவே பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக ஜே.கே ரஞ்சித் பெரேரா பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் தற்போது எண்ணாயிரம் பேர் அங்கம் வகிக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைப்பு-

australiaசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டபோது நாடு கடத்தப்பட்ட ஆறு இலங்கையர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்ட குறித்த ஆறு பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு முயன்றதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் பீட்டர் டுட்டன் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமானநிலைய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் மனுஸ்தீவு முகாம் மூடப்படுகின்றது-

australiaஅவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு வரும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவுஸ்ரேலியாவின் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் ஒன்று மனுஸ்தீவு தடுப்பு முகாம். பப்புவா நியூகினி தீவுகளில் உள்ளது இந்த மனுஸ்தீவு முகாம். இந்த முகாமை மூடுவது தொடர்பாக அவுஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் பப்புவா நியூகினியின் அமைச்சர் பீட்டர் ஓ நீல்-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என்றும் அதேநேரத்தில் இந்த முகாமிலிருக்கும் யாரும் அவுஸ்ரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மனுஸ்தீவு முகாமில் தற்போது 854பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வேறு முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீதிகளை புனரமைத்துத் தருமாறு பூம்புகார் மக்கள் கோரிக்கை-

poompukarயாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியின் வீதிகளை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தெடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், யாழ் அரியாலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குக் கிராமமான பூம்புகார் பகுதியின் 13ஆம் 14ஆம் 15ஆம் குறுக்குத் தெருக்கள் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் மணல் நிறைந்தகாக காணப்படுகிறது. இந் நிலையில் போக்குவரத்து செய்வதில் பெரும் இடர்பாடுளை சந்திக்கும் இக் கிராம மக்கள் மழை காலங்களில் குறித்த வீதிகளில் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆகவே குறித்த விதிகளை மிக விரைவில் புனரமைப்பு செய்து தரும்படி அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு-

bombதிருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் யுத்த ஆயுதங்கள் சில இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது,

இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதிவெடிகள் என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன.

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக ஊழல் வழக்கு-

courtsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான 5 வருடங்கள் தனது சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரியவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக 50,000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)

a1வட்டுக்கோட்டை டச்சு றோட் சித்தங்கோணியைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான சிவகணேசன் அம்பிகாதேவி என்பவருக்கு அவரின் சுயதொழில் முயற்சிக்காக சுமார் 50000 ரூபா பெறுமதியான துணிவகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான இத்தாலியைச் சேர்ந்த ஜெயரஞ்சன் தியோடர் அவர்கள் எமது சங்கத்தினுடாக வழங்கியுள்ளர்ர். கடந்த கால யுத்தநிலைமைகளின் விளைவினால் அம்பிகாதேவி அவர்களின் கணவரான சிவகணேசன் 2007ம் ஆண்டு சித்திரை 10ம் நாள் இனந்தெரியதோரல் கடத்தப்பட்டு சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இதன் காரணமாக அம்பிகாதேவியும் அவராது மூன்று பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் பல இன்னல்களுடன் வாழ்ந்து வந்த நிலையில். தெல்லிப்பளைவீதி சித்தங்கேணியில் தற்காலிகமாக தையல் கடை ஒன்றை நாடத்தி வருகின்றார். இந்நிலையில் எமது சங்கத்திடம் சிவகணேசன் அம்பிகாதேவியினால் தனது சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக ஆரம்பகட்டமாக தையல் கடைக்கான சில துணிவகைகளை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது கடையில் வைத்து சங்க பொருளாளர் திரு.க.ரகுமான் அவர்களினால் நேற்று துணிவகைகள் கையளிக்கப்ட்டன. இவ் மனிதபிமான உதவியை எமது சங்கத்தின் ஊடாக வழங்கிய புலம்பெயர் உறவான ஜெயரஞ்சன் தியோடர் அவர்களுக்கு பயனாளி சார்பிலும் எமது சங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்).

a1 a2