15 ஆயிரத்திற்கும் குறைவானவர்களையே மீள்குடியேற்ற வேண்டியுள்ளது-வடக்கு ஆளுநர்-

reginoldஒரு இலட்சத்து 60 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்திலேயே அதிகமானோர் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாகவும் இடப்பற்றாக்குறையே அதற்குக் காரணம் எனவும் வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தற்காலிக முகாம்களில் வசிக்கும் 50 வீதமானவர்களிடம் காணிகளுக்கான உரிமம் இல்லை. காணியற்றவர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மீள்குடியேற்றத்தின் பின்னரான பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ரெஜினோல்ட் குரே, ஜீவனோபாய பிரச்சினையே அதில் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே வட மாகாண ஆளுநர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

பூநகரியில் கிணற்றில் தவறி வீழ்ந்து குழந்தை மரணம்-

child dead (2)கிளிநொச்சி மாவட்டம் பூநகரி ஆலங்கேணிப் பகுதியில் நேற்றையதினம் கிணற்றில் தவறி வீழ்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவத்தில் வசந்தராசா திசானன், வயது 2 என்னும் பாலகனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆசிரியராக தொழில் புரியும் தந்தை கடமை நிமித்தம் வெளியில் சென்றிருந்த சமயம் சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடிய வேளையில் கிணற்றினுள் தவறி வீழ்ந்துள்ளான். இதனையடுத்து உடனடியாகவே உறவுகள் சிறுவனை கிணற்றிலிருந்து தூக்கி பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுவனின் உடல்நிலை மோசமாக இருந்தமையினால் உடன் ஆரம்ப சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டான். எனினும் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கக்பட்ட சமயம் சிறுவனின் உயிர் பிரிந்திருந்தது. குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் பூநகரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாமென ஆர்ப்பாட்டம்-

missingகாணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்தை கொழும்பில் அமைப்பதன் மூலம் மக்களுக்கு நன்மையில்லை என்று கூறி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் அதிகமானவர்கள் காணமால் போயிருப்பது யுத்தத்தின் காரணமாகவே எனவும், அதன் காரணமாக குறித்த அலுவலகம் கொழும்பில் அமைக்கப்பட்டால், தமது தேவைகளை முன்வைப்பதற்காக அதிக செலவு செய்து கொழும்புக்கு வரவேண்டி ஏற்படுவதாகவும் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் இதுவரை எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும அமைப்பாளர் பதவியிலிருந்து விலகல்-

dalasமாத்தறை மாவட்ட சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியினரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நேற்று முன்தினம், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரபல அமைப்பாளர்கள் சிலரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கிய நிலையிலேயே, டலஸ் அழகப்பெரும தானாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மைத்திரியால் நீக்கப்பட்ட அனைவரும் மஹிந்த ஆதரவு அணியினர் என்பதுடன், டலஸ_ம் மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருபவர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வெள்ளவத்தைப் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு-

granadeகொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள காணியொன்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைக்குண்டுகள் இரண்டையும் மீட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அதனை செயழிலக்கச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.