சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானி பணி இடைநீக்கம்-

sri lankan airlines (2)சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL554 என்ற விமானத்தினுடைய விமானி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனில் இருந்து கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்தது. எனினும், அந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமடைந்ததோடு, நேற்று இரவு 07.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனையடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது அவர் மதுபோதையில் இருந்தாரா என மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் தோல்வியடைந்துள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னாள் பணிப்பாளரிடம் விசாரணை-

investigateஅரச புலனாய்வு சேவை மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் சந்திரா வாகிஷ்ட சம்பந்தமாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் வழக்கு பொருளாக இருந்த லொறி ஒன்றை, அப்போதைய பொலிஸ் மா அதிபரின் அனுமதியின்றி மற்றுமொரு தரப்புக்கு வழங்கிய சம்பவம் தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு நிமல் சந்திரா வாகிஷ்டவிடம் சுமார் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக பந்துல குணவர்த்தன அறிவிப்பு-

bandula gunawardenaகூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்டளஸ் அழகப்பெருமவைத் தொடர்ந்து பந்துல குணவர்தனவும்,சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொழும்பு, ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கியதுடன் புதியவர்களை நியமித்தார். இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் டளஸ் அழகப்பெரும, அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டுக்கு பின்னர், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலர் அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், தாம் விலக்கப்படுவதற்கு முன்னதாக பந்துல குணவர்தனவும், டளஸ் அழகப்பெருமவும் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்கள் கைது-

arrestஇனியபாரதியின் முன்னாள் சாரதி உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். இத்தகவலை திருக்கோவில் பொலிஸார் அறிவித்துள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமது உறவுகள் காணாமல் போனமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் சாட்சியமளித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்திருந்தனர். இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கட்டளை வழங்கியது. இதனையடுத்து முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களான திருக்கோவில் தம்பிலுவில் முனையக்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன், தம்பிலுவில் வீ.சி. வீதியைச் சேர்ந்த க.கமலநாதன் (மதி) மற்றும் இனியபாரதியின் முன்னாள் வாகன சாரதியான தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த ஆ.யுவராஜ் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஹரன், யூட் ஆகிய இருவரை விசாரணைக்காக அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து அழைத்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

ரயில் மீது கல்லெறிந்தால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ள நடவடிக்கை-

trainபயணித்துக் கொண்டிருக்கும் போது ரயிலுக்கு கல் எறிபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வேண்டி ஒரு தொகைத் துப்பாக்கிகள் ரயில்வே பாதுகாப்புப் பிரிவுக்கு பெற்றுக் கொண்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு இராணுவத்தின் அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கியினால் சுமார் 15 மீற்றர் தூரத்தில் உள்ள ஒருவருக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும். வெலிசர கடற்படை முகாமிலிருந்து 25 துப்பாக்கிகள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் குறுந்தூர இலக்கு கொண்ட துப்பாக்கிகளையே பயன்படுத்துகின்றனர். இவ்வகையான துப்பாக்கிகள் 192 தற்பொழுது திணைக்களத்தில் உள்ளன. புதிதாக பெற்றுக்கொண்டுள்ள துப்பாக்கிகள் ரயில்வே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மைய காலப்பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் ரயில்மீது கல் எறிந்து தாக்குதல் நடாத்தும் பன்னிரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

19 வருடகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள 3000 முறைப்பாடுகள்-

human rightsஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 3000 முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த முறைப்பாடுகள் சுமார் 19 வருட காலமாக விசாரிக்கப்படாமல் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு போதியளவான அதிகாரிகள் நியமிக்கப்படாமையே இதற்கு காரணமென குறிப்பிடப்படுகின்றது. இதனால் முறைப்பாட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், விரைவில் ஒப்பந்த அடிப்படையிலான அதிகாரிகளையாவது நியமித்து தேங்கிக் கிடக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்ற 600 இலங்கையர்கள் கடந்த வருடத்தில் மரணம்-

dead.bodyஇலங்கையிலிருந்து கடந்த வருடத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் 600 இற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளிலேயே மரணித்துள்ளதாக வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 428 பேர் ஆண்கள், 180 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் சுமார் 100 பேர் திடீர் மரணமடைந்துள்ளனர். 367 பேர் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். 9 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர். 28 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். மேலும் 109 பேரின் மரணத்துக்கு இதுவரை காரணம் அறியப்படாது மர்மநிலையில் உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மரணித்தவர்களுக்காக இந்த நாட்டிலுள்ள உறவினர்களுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் கிடைக்கப் பெற்ற நஷ்ட ஈட்டுத் தொகை 20 கோடியே 96 லட்சம் ரூபாவாகும். இதன் மூலம் 148 குடும்பங்கள் நலன் பெற்றுள்ளன. இதனிடையே வெளிநாட்டவர்களுக்காக பல்வேறு அறிக்கைகள், கடிதங்கள், சான்றிதழ்கள் என்பனவற்றுக்காக வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவு கடந்த வருடத்தில் மாத்திரம் 12 கோடியே 47 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளதாகவும் அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.