காணாமற்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் ஒப்பம்-

karu jayasuriyaகாணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய இன்று கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பிரதி செயலாளர் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல், அதனை நிர்வகித்தல் மற்றும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறித்த சட்டமூலத்தை அவசரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முற்படுவதாக தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். எவ்வாறாயினும், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கருஜயசூரிய இந்த சட்டமூலத்தில் இன்றைய தினம் காலை கையொப்பமிட்டார். இதன்மூலம் காணமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலம் இன்றுமுதல் சட்டமாக மாறியுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல கூறியுள்ளார். ஆகவே இன்று முதல் இந்த சட்டம் நடைமுறையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் காலமானார்-

nathanமுன்னாள் சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 92 ஆவது வயதில் நேற்று காலமானார். இவர் சிங்கப்பூரின் ஆறாவதும் மிக நீண்ட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தவரும் ஆவார். 1999ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இரு தடவைகள் அவர் சிங்கப்பூரின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், தென்கிழக்கு ஆசிய கல்வி நிறுவனம், சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை ஆகியவற்றின் மூத்த கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, குடியுரிமைப் பணிகள், பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளில் எஸ்.ஆர்.நாதன் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவராக, கடந்த 1988 ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டுவரை அவர் பணியாற்றியுள்ளார். அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லூங், ஜனாதிபதி டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்துவருகிறது. சிங்கப்பூர் தமிழரான எஸ்.ஆர். நாதன் 1924ம் ஆண்டு ஜூலை 3ம் திகதி பிறந்தார். சிங்கப்பூர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1955ல் மருத்துவ சமூக அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் தூதர் என படிப்படியாக பல முக்கிய பதவிகளில் வகித்து இறுதியில் சிங்கப்பூர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி தெற்கில் கையெழுத்து போராட்டம்-

dfdfd (2)தென்பகுதி மக்களிடையே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் கையெழுத்துப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தீர்மானித்துள்ளது. அரசியல்வாதிகள், தொழிற்சங்கத்தினர், சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரையும் இணைத்து இப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒன்றுக்கொன்று முரணான கருத்துகள் வெளியாகிவரும் நிலையிலேயே இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும், தமிழ்க்கட்சிகளும் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்துக்கு நீதிமன்றம் மூலம் தீர்வைக் காணமுடியாது எனவும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையின் அவசியம் குறித்த கருத்தை தென்பகுதியில் உருவாக்குவதற்காக இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஐ.நா.மனித உரிமை பேரவையின் செப்ரெம்பர் அமர்வுக்கு முன் தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பாரிய பேரணியை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்க்கு அகதி அந்தஸ்து வழங்குவதில் சுவிஸ்லாந்து கடும்போக்கு-

switzerlandஇலங்கைப் பிரஜைகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக சுவிஸ் குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுவிஸ் வெளிவிவகார அமைச்சு, சுவிஸ் குடிவரவு திணைக்களம் ஆகிய இரண்டும் இணைந்து இலங்கையில் மேற்கொண்ட ஆய்வை அடுத்து சுவிட்சலாந்தில் இலங்கையர்கள் அகதி தஞ்சம் கோருவது தொடர்பில் 47 பக்க அறிக்கை ஒன்றை சுவிஸ் குடிவரவுத் திணைக்களம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு, கிழக்கு உட்பட பல பாகங்களைப் பார்வையிட்டதுடன் பல தரப்பினரையும் சந்தித்தது. இதனடிப்படையில் தற்போதைய இலங்கை நிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் என்பன காணப்படுவதாகவும் தெரிவித்தது. எனினும் உண்மையாக அச்சுறுத்தல் உள்ளவர்கள் தொடர்பாகப் பரிசீலிக்கப்படுமென செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கையர்க்கு அகதித் தஞ்சமும் அடைக்கலமும்; கொடுத்த சுவிஸ், பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் இப்பொழுது தங்கள் கதவுகளை இறுக மூடிக்கொண்டுள்ளன

வாகன விபத்தில் மருத்துவத் தாதி உயிரிழப்பு-

deadதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில், மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மருத்துவமாது உயிரிழந்துள்ளார் என, சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர், ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த எஸ்.சந்தானலக்ஸ்மி (வயது 46) எனத் தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய வான் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே மோதல்-

beatபேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று இரவு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம் வருட மாணவர் குழுக்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல்களில் 12 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவர்களால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, தமிழ் மாணவர்கள், குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து 2ஆம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் வழிமறித்துள்ளனர். அத்துடன், தம்மிடமிருந்த பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ், முஸ்லிம் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உடனடியாக நேற்றுமாலை 7 மணியளவில் சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேற்படி 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த இரத்தக் காயங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இந்த மோதலில் இனவாதம் இருப்பதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இல்லை என, மேற்படி பல்கலைக்கழகத்தின் மாணவ சங்கம் தெரிவித்துள்ளது.