சுலைமான் தொடர்பில் அறிந்தால் உடன் தகவல் வழங்குமாறு கோரிக்கை-

sulaimanகொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தலாவல எவன்யூ இலக்கம் 21இல் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் ஷாகிப் சுலைமான் என்பவர் காணாமல் போயுள்ளார். கடந்த 21ம் திகதி இரவு 11.15 அளவில் வீட்டிக்கு அருகில் வைத்து அவர் காணாமல் போயிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என, பம்பலபிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதன் பொருட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், இது குறித்த தகவல் அறிந்தால் கீழ் வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
071-8591727 – கொழும்பு குற்ற பிரிவுப் பணிப்பாளர்
071-8591735 – குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி
071-8591580 – பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம்

புதுக்கடை நீதிமன்றுக்குள் அடிதடி, இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு-

courtsகொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆடைகளை கிழித்துக்கொண்டு அடித்து சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பெண்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஒகஸ்டா அதபது உத்தரவிட்டுள்ளார். சாந்தமாலி பெரேரா(வயது 28) மற்றும் சுதாச்சாரி மாலினி (வயது 42) ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரு வேறு குற்றச்சாட்டின் பேரில் மாலினியின் கணவரும் அவரது மகனும் வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிணை கோரி புதுக்கடை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாலினி மன்றுக்கு பிரவேசித்தார். இதன்போது, சாந்தமாலி, ‘கள்ளனின் தாய் வந்துள்ளார்’ என கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாலினி நீதிமன்றத்துக்குள் அவருடன் முரண்பட்டதையடுத்து, இருவரும் ஆடையை கிழித்துக்கொண்டு அடித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நடவடிக்கையை குழப்பியதற்காகவும் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டுக்காகவும் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அனுர சேனநாயக்க, சுமித் ஆகியோர் தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்துவைப்பு-

anura senanaike policeமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி சந்தேகநபர்களை அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு-

pillaiyanமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மாதம் 07ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

வெலே சுதாவின் வழக்கு ஒத்திவைப்பு-

vele sutha friend6.7 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனைப் பெற்று வரும் வெலே சுதாவின் வழக்கு விசாரணையை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வி.டி.எச். மொராயஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று புதன்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மணிலால் வைத்தியதிலக நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்காததன் காரணத்தினால் நீதிபதி மொராயஸினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

களவான தொகுதி அமைப்பாளர் ஜனக வாகும்பரவும் இராஜினாமா-

sdaaசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் களவான தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனக வாகும்பர குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கடந்த 19ம் திகதியும், ஹோமாகம ஆசன அமைப்பாளராக பதவியில் இருந்த விலகுவதாக பந்துல குணவர்த்த கடந்த 21ம் திகதியும் அறிவித்தனர். இதனையடுத்து, டலஸ் அழகப்பெருமவின் இடத்திற்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும், பந்துலவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி திலகசிறியும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.