வடக்கு, கிழக்கில் 10ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை-

housing schemeவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உரிமையாளர்களின் முன்னெடுப்புடன் கூடிய பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதவிர, உள்ளக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

பூந்தோட்டம் நலன்புரி நிலையங்களிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களுக்கு வவுனியா வடக்கு சின்ன அடம்பனில் 66 வீடுகளும், புளியங்குளத்தில் 31 வீடுகளுமாக 97 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களிலுள்ள 936 குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை, கீரிமலை ஆகிய இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, உரிமையாளர்களின் முன்னெடுப்புடன் பலாலி வடக்கில் 104 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், இந்த பணிகளை ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். நலன்புரி நிலையங்களிலுள்ள காணியற்ற சுமார் 250 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், நலன்புரி நிலையங்களில் இருந்து முழுமையாக வெளியேற்றி மீள்குடியேற்றப்பட வேண்டிய 452 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நிலைமையின் கீழ், நலன்புரி நிலையங்களிலுள்ள மேலும் 100 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக, காங்கேசன்துறை தெற்கு, மேற்கு மற்றும் மையப்பகுதி, பலாலி – வீமன்காமம் வடக்கு மற்றும் தையிட்டி ஆகிய இடங்களிலுள்ள சுமார் 450 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி மேலும் கூறியுள்ளார்.