காணாமற்போனோர் செயலக செயலராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரை-

Mano_thiththawella-300x200புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்த வெலவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக. அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்கும் சட்டத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்பமிட்டார். இந்தச் சட்டத்தின்படி காணாமற்போனோர் செயலகத்தின் உறுப்பினர்களாக, எல்லா இனங்களையும் சேர்ந்த ஏழு பேர் நியமிக்கப்படுவர். அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின்படி, ஜனாதிபதியே இந்த உறுப்பினர்களை நியமிப்பார். காணாமற்போனோரைத் தேடுதல், கண்டறிதல், காணாமற்போனோரின் உறவினர்களுக்கான உதவிகளை வழங்குதல், காணாமற்போனோர் பற்றிய தரவுகளை ஆவணப்படுத்தல் ஆகிய பணிகள் இந்தச் செயல கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும். காணாமற்போனோர் செயலகத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர், உண்மை கண்டறிதல், விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமை சட்டங்கள், அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் அனுபவமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்கும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலகத்தின் செயலாளர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள, மனோ தித்தவெல, சந்திரிகா குமாரதுங்க தலைமையில் செயற்படும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழக 10 மாணவர்களுக்கு வகுப்புத் தடை-

peradeniya universityபேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைபீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 22ம் திகதி இரவு அந்த பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தைச் சேர்ந்த இரு மாணவக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இதில் ஐவர் காயமடைந்திருந்தனர். இவர்கள் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு-

italyமத்திய இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவில் புதன்கிழமை அதிகாலை 3.32க்கு ஏற்பட்ட பலமான நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி வருகின்றனர். மீட்புப்பணி நடைபெறும் இடங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளான அம்பிரியா, லசியோ மற்றும் மார்ஷ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தன்னர்வ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலிய செஞ்சிலுவை அமைப்பு 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடிழந்தவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து கடலில் மூழ்கி இலங்கை தமிழர்கள் 5 பேர் மரணம்-

englandகடலில் மூழ்கி இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 5 பேர், இங்கிலாந்தில் உள்ள கடலில் மூழ்கி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில் இருந்து இவர்களது சடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இறந்தவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் மக்கள் கூட்டமாக திரண்டு வந்து கடற்கரைக்கு வருகின்றனர். இந்நிலையில், கடலில் குளிப்பதற்காக சென்ற 5 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சில மணித்தியாலங்களின் பின்னர் இருவர் மீட்கப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் திங்கட்கிழமையும் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

சஜீத், நவீன், இந்திக்க சென்ற ஹெலிக்கொப்டர் நுவரெலியாவில் அவசரமாக தரையிறக்கம்-

sdfddஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பயணித்த தனியார் ஹெலிக்கொப்டர் ஒன்று, நுவரெலியாவிலுள்ள மரக்கறி விவசாய நிலமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார ஆகியோரே குறித்த ஹெலிக்கொப்டரில் பயணித்துள்ளனர். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நுவரெலியா சீதாஎலிய பகுதியில் இன்று காலை 09.30அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அந்த ஹெலிக்கொப்டரில் பயணித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்னர் பிரிதொரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா குடியிருப்பு முகாமிலிருந்து இராணுவம் வெளியேற்றம்-

army campவவுனியா குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்திற்குச் சொந்தமான இராணுவ முகாம் கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி அந்த கட்டத்தை மீள வவுனியா மாவட்ட செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம் மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்டடம் இராணுவ முகாமுக்காக கையளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் குறித்த கட்டடத்தை மீள பெற்றுத் தருமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வெள்ளம் காரணமாக 300ற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு-

flood indiaவடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பருவமழை வெள்ளம் காரணமாக 300 இற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பீகார் மற்றும் இந்தியாவின் கிழக்கு பகுதி நகரங்களில் கங்கை நதியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் 24லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தங்களது வீட்டை விட்டு வெளியேற விரும்பாதவர்களை பேரழிவு நிவாரண அதிகாரிகள் படகுகளில் சென்று பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.