இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 10 மாதங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னரும் எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது.
கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் சம்மேளனம் மற்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் இன்று நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியவை கலந்து கொண்டன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது அடிப்படை சம்பளமாக ரூபாய் 450 மற்றும் ஏனைய கொடுப்பணவுகள் அடங்கலாக ரூபாய் 620 நாளொன்றுக்கு வழங்கப்படுகின்றது
இன்றைய பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளம் ரூபாய் 650 ஆக அதிகரிக்கப்பட்டு ஏனைய கொடுப்பணவுகள் அடங்கலாக ரூபாய் 975 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கங்களினால் வலியுறுத்தப்பட்ட போதிலும் மறு தரப்பினர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
அடிப்படை சம்பளம் மட்டும் 50 ரூபாய் அதிகரிப்பு வழங்கப்பட்டு தினக்கூலி மற்றும் ஏனைய கொடுப்பணவுகள் அடங்கலாக ரூபாய் 670 மட்டுமே வழங்க முடியும் என தோட்ட நிர்வாகங்கள் பதில் அளித்தாக கூறுகின்றார் பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பொதுச் செயலாளரான எஸ். இராமநாதன்.
இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் போது தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது 10 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் மறுதரப்பினரால் முன்வைக்கப்பட்டபோது அனைத்தையும் நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக 10 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்று முடிந்த இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இணக்கமும் ஏற்படாமல் முடிவடைந்துள்ளது.
அடுத்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. முதலாளிகள் சம்மேளனம் தான் அதனை தீர்மானிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய நலன்களை கருத்தில் கொண்டு இரு தரப்புக்குமிடையில் இரு வருடங்களுக்கொரு தடவை கூட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட வேண்டும்.
இறுதியாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் அன்று கைச்சத்திடப்பட்ட ஓப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் செயலிழந்து 16 மாதங்கள் கடந்த பின்னரும், இன்னமும் புதுப்பிக்கப்படவில்லை.
தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 620 ரூபாய் தினச்கூலி 1000 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே இரு தரப்பு கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு தடையாக அமைந்துள்ளது.
உலகச் சந்தையில் தேயிலை, ரப்பர் விலை வீழ்ச்சி, உள்நாட்டில் உற்பத்தி வீழ்ச்சி போன்ற காரணங்களை முன்வைத்து பெருந்தோட்ட முதலாளிகள் சம்மேளனத்தினால் சம்பள உயர்வு கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கம் செப்டம்பர் வரை இரு தரப்புக்குமிடையில் ஆறு சுற்று பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.
சம்பள உயர்வு கோரிக்கை விடயத்தில் இரு தரப்பிலும் விட்டுக் கொடுப்பு இல்லாத நிலையில் முந்தைய பேச்சுவார்த்தைகள் போன்று இன்றைய பேச்சுவார்தையும் இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்திருக்கிறது.