ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைவரவுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் பான் கீ மூன் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஜனாதிபதி, பிரதமர் உட்பட மற்றும் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் காலி உள்ளிட்ட நாட்டின் சில் பிரதேசங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
ரிஷாத் பதியுதீனிடம் விசாரணை; ஜனாதிபதி ஆணைக்குழு
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
தற்போது சதொச நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சராக ரிஷாத் பதியுதீன் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் சுகாதார அமைச்சு
உணவு பாதுகாப்பு வாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் நுகர்வுக்கு தகுதியில்லாத உணவுகளை ஆகார வகைகளை விற்பனை செய்த 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கடந்த 22ம் திகதி ஆரம்பமான உணவு பாதுகாப்பு வாரத்தின் நான்காவது நாளான நேற்று (25) வரை 12,275 வர்த்தக நிலையங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு தகுதியற்ற 10,824 வகையான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்பு வாரம் வரும் 29ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் 1800 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு பூராகவும் இதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல். சோமையாஜி ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
2013-ஆம் ஆண்டில் நவநீதகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், அவர் தனது பதவியை வெள்ளிக்கிழமையன்று ராஜினாமா செய்தார்.
அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமியை ஆளுநர் நியமித்திருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
மும்பையின் பிரபல தர்காவில் புனித சமாதிக்குள் பெண்கள் நுழைவதற்கான தடை ரத்து
மும்பையில் உள்ள பிரபல ஹாஜி அலி தர்காவில் புனித சமாதிக்குள் பெண்கள் நுழைய கூடாது என்ற தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஹாஜி அலி தர்கா வழிபட்டு தலத்தில் உள்ள தடையானது பெண்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அரசியல் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தடை கொண்டுவரபட்டது. ஆண் துறவிகளின் சமாதியை பெண்கள் தொட அனுமதிப்பது ‘கடுமையான பாவம்’என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஹாஜி அலி தர்கா 15ஆம் நுற்றாண்டின் சூபி மத வழிபாட்டுத்தலம் ஆகும். இந்த தலத்தை நடத்திவரும் அறக்கட்டளை, மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
சமீப மாதங்களில் இந்தியாவில் பெண்கள் நுழைவதை தடை செய்யும் இந்து மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்கள் எதிர்பாராத சட்ட சவால்களை சந்தித்து வருகின்றன.