வடமாகாணத்தில் காணாமால் போனவர்களின் உறவுகளுக்காக வடமாகாண சங்கம் ஒன்றை அமைக்க மூன்றுபேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், நீர்ப்பாசன துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபையின் உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் அடங்குகின்றனர்.காணாமல் போனவர்கள் தொடர்பாக வடமாகாண சபையின் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகிய என்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர்கள் தலைமையில் நடாத்தப்பட்ட விசேட கூட்டம் நேற்று யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்குஇது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
போருக்கு பின்னர் காணாமால் போனவர்கள் தொடர்பாக ஆராயும் போது சிங்கள மனித உரிமை அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் பல ஆதரவுகளை தந்துள்ளன. எனினும் இது ஆட்சி மாற்றத்திற்காக தந்த ஆதரவே தவிர எமது தீர்வுக்கான ஆதரவு அல்ல என்று கூறினார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், காணாமல் போனவர்கள் விடயங்கள் தொடர்பில் மிக தெளிவான ஒரு தீர்வினை பெற்றுத்தர எல்லா நாடுகளுடன் கதைக்கின்றார். ஐ.நா சபையுடனும் கதைக்கின்றார்.
இந்நிலையில் வடமாகாணத்தில் காணாமால் போனவர்களின் உறவினர்களை ஒன்று திரட்டவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
இதற்கு மக்களிடம் இருந்து ஒரு தலைமைத்துவத்தினை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் காணாமால் போனவர்களின் உறவுகளுக்காக சங்கம் ஒன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
அதன்பின்னர் வடக்கு, கிழக்கு காணாமால் போனவர்களின் உறவுக்களுக்கான சம்மேளனம் ஒன்றை அமைக்க இருக்கின்றோம் என்று வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்