சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்-
tna (4)வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழு, பிரதமரை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் தீய நோக்கங்களையும், இன ரீதியான பதற்றங்களையும் உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதன்போது சுட்டிக்காட்டியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களுக்கான தகுதிபெற்றிருந்தும் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படாமை குறித்தும் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும், சிங்கள மக்கள் வடக்கிலே மீளக்குடியேறுவதையும் அங்கே தமது மதத்தினையும் கலாச்சாரத்தினையும் பின்பற்றுவதை வரவேற்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இனரீதியான பதற்றத்தை தூண்டும் விதத்திலும், வடக்கு கிழக்கிலே சனத்தொகை பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் குந்தகத்தை ஏற்படுத்தும் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்றைய சந்திப்பின் போது பிரதமர் உறுதியளித்ததாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அணிமீது தாக்குதல் நடாத்திய ஆயுததாரிகளில் நால்வர் சுட்டுக்கொலை-

cricket team attachedபாகிஸ்தானில் வைத்து 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிமீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில் 4 பேர் இன்று அதிகாலையில் அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். மனாவ என்ற பிரதேசத்தில் பொலிஸாருக்கும் – ஆயுததாரிகளுக்கும் இடம்பெற்ற மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (டுயளாமயச-ந-தூயபெஎi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். 7 ஆயுததாரிகள் பொலிஸாருடன் மோதியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்கள் சுபைர் அலைஸ் நைக் முகமட், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது, லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் 2008ம் ஆண்டு லாகூர்மூன் மார்க்கெட்மீதான தாக்குதல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக, தி ஹிந்து தெரிவித்துள்ளது

யாழில் நடமாடும் சேவை அமைச்சர் மங்களவால் ஆரம்பித்து வைப்பு-

nallurகொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழில் ஆரம்பித்து வைத்தார். வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். வடமாகாண மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த நடமாடும் சேவையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் பங்குபற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால், வழங்கப்படும் சர்வதேச தேவைகளுக்காக ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பிறப்பு, விவாகம் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், கடவுச்சீட்டு சம்பந்தமான வழிகாட்டல்கள், பல்வேறு கொன்சியுலர் அலுவல்கள், இரட்டை பிரஜாவுரிமை மற்றம் குடியுரிமை பெறுதலுக்குரிய நடவடிக்கைகள் என்பன பற்றிய விழிப்புணர்வுகளையும் சேவைகளையும் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நலன்புரி முகாம்கள் சிலவற்றுக்கு இன்று விஜயம் செய்தவேளையில் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொள்ளாத வீடமைப்பு திட்டங்கள்-

housing schmeவடக்கு-கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் வழங்கப்படுகின்ற வீடுகளில் தங்களின் தேவைகள் பற்றி கவனம் செலுத்தப்படுவதில்லை என போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். போருக்குப் பின்னர் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற அமைப்புகளினாலும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர இந்தியா மற்றும் ஐரோப்பிய யுனியன் உதவி வீடுகளும் அரசாங்கத்தின் தெரிவு ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிடைத்துள்ளன. இந்த வீடுகளை பொறுத்தவரை கழிப்பறை, வீட்டு நுழைவாயில் உட்பட மாற்றுக் திறனாளிகளுக்குரிய அணுகும் வசதிகளை கொண்டதாக இல்லை. கிழக்கு மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகளிலும் இவ்விடயம் மாற்றுத் திறனாளிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளியொருவரை கொண்டுள்ள குடும்பத்திற்கு கிடைக்கும் வீடு அவருக்கு ஏற்ற வசதிகளை கொண்டதாகவே இருக்க வேண்டும் என கட்டைப்பறிச்சானை சேர்ந்த முன்னாள் புலிகள் இயக்க போராளியான கவிதா சீவரெத்தினம் வலியுறுத்தினார். போரில் காயமுற்று முதுகுத் தண்டு பாதிப்புக்குள்ளான இவர் இடுப்புக்குக் கீழ் உணர்ச்சியற்ற நிலையில் தற்போது மாற்றுத் திறனாளி என்ற அடையாளத்துடன் சமூகத்தில் காணப்படுகின்றார். நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணி முன்னிலையில் போர் காரணமாக மாற்றுத் திறனாளியானோர் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்த அவர், தங்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள் மாற்றுத் திறனாளிகளுக்குரிய அனுகும் வசதிகளை கொண்டதாக இருக்கும் என அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் கூறப்பட்டிருந்த போதிலும் ஏனையவர்களைப் போன்றே தங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கழிப்பறை, நுழைவாயில், நீர் மற்றும் மின்சார வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வசதிகளுடன் எதிர்காலத்தில் அமையவுள்ள வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் கவிதா சீவரெத்தினம் வலியுறுத்தினார். புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றம் மீள் குடியேற்ற அமைச்சினால் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 10 ஆயிரம் வீடுகள் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர 7500 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாற்றுத் திறனாளிகளுக்குரிய அணுகும் வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி எதிர்காலத்தில் வீடுகள் மற்றும் கழிப்பறைகள் அமையும்போது மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்கின்றார். ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் அவர்களின் கருத்துக்களையும் பெற்று மாற்றுத் திறனாளிகளுக்குரிய வீடுகள் மற்றும் கழிப்பறைகள் அவர்களின் அணுகும் வசதிகளுடன் அமையும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே வீடுகள் மற்றும் கழிப்பறைகளை பெற்றுள்ளவர்கள் தொடர்பாகவும் அமைச்சு கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். (நன்றி – பிபிசி)