வவுனியாவில் மேலும் துப்பாக்கிகள் மீட்பு-

arms vavuniyaவவுனியா ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் 38 மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குமார இன்று தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றினை சுத்தம் செய்த போது அதில் புதையுண்ட நிலையில் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் 30 எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனக் கருதிய பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட வவுனியா நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்தனர். வவுனியா நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து வவுனியா நீதிமன்ற பதிவாளர் எம்.எஸ்.அமரட்ண முன்னிலையில் இன்றுகாலை விசேட அதிரடிப்படையினரால் மீண்டும் தோண்டும் பணிகள் இடம்பெற்றது. இதன்போது 8எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டது. இவ்வாறாக இவ்விடத்தில் இருந்து 38எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ஓமந்தை பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் முன்னர் இராணுவ முன்னரங்க காவல் நிலைகள் இருந்தன. இதேவேளை, வவுனியா, ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியிலிருந்து 3 கிலோ எடைகொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – இரா.சம்பந்தன்-

sampanthan_maithripalaஅதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தில் விவசாயம், கைத்தொழில் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன். யுத்தம் முடிவடைந்ததால் இப்போது மீதமிருப்பது அபிவிருத்தி மட்டுமே. தமிழ் தேசிய தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என உறுதிமொழி வழங்குகின்றேன். முப்படைகள், நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகளும் மத்திய அரசின்கீழ் செயற்பட வேண்டும். மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண நிர்வாகத்தின்மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதால் அடுத்துவரும் 10வருட காலத்திற்குள் இலங்கையை சிங்கபூர் போன்ற நாடாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக மனுத் தாக்கல்-

courtsஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் செயற்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி வழக்கறிஞர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த அடிப்படை உரிமை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை முன் அனுமதியின்றி பார்க்கமுடியும் என, ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை தான் சந்திக்க அனுமதி கோரி 30 நாட்களுக்கும் மேலாகின்றது எனவும், ஆனால் இதுவரை அனுமதி கிட்டவில்லை எனவும் மனுதாரர் நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை, மொஹமட் முசமில் ஆஜர்-

kumara welgamaமுன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்றுகாலை பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக நாராஹேன்பிட்ட சாலிகா மைதானத்தை பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவர் ஆஜாராகியிருந்தார்.

இதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசமில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியிருந்தார். முசமில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்தபோது இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் ஆஜாராகியிருந்தார்.

உலகவங்கியின் தெற்காசிய உபதலைவர் இலங்கைக்கு விஜயம்-

world bankஉலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக தற்போது விஜயம் செய்வதாக, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இன்று நாட்டிற்கு வந்துள்ள எனட் டிக்சன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். மேலும், வடக்கில் மேற்கொள்ளப்படும் சில வேலைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.