வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம் வடக்கிலும் நிறுவவேண்டும்-வடக்கு முதல்வர்-

vigneswaranவெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவினால், அங்குள்ள மக்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும், இது குறித்து துறைசார் அமைச்சர் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட, ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதலுக்குமான நடமாடும் சேவை நேற்று நல்லூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நல்லூர் உற்சவம் நடைபெறும் இவ்வாறான சனக்கூட்டம் நிறைந்த தினங்களில் நடாத்தப்படுகின்ற நடமாடும் சேவையும் அதன் வழிகாட்டி அறிவுறுத்தல்களும் கூடுதலான மக்களுக்கு போய்ச்சேரும் என்பதில் ஐயமில்லை. கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது இளைஞர்கள் யுவதிகளில் பலர் வெளிநாடுகளில் குடியேறி வாழ்கின்றனர். அவர்கள் அந் நாடுகளில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் உயர்கல்வியை மேற்கொள்வதற்கும் தாம் இலங்கையில் பெற்றுக்கொண்ட கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் என இன்னோரன்ன சான்றிதழ்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளை பெறவேண்டிய தேவை உள்ளது. இதற்கென தமது பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு விண்ணப்பங்களை அனுப்புகின்றனர். அவற்றை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் கொடுத்து உறுதிப்படுத்துவதற்காக இப் பகுதிகளில் இருந்து மிகப் பெரிய பணத்தைச் செலவு செய்து சொகுசு பஸ்கள் மூலமாகவும், புகையிரதங்கள் மூலமாகவும் கொழும்புக்குச் சென்று அங்கே வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அலுவலகத்தை தேடிப்பிடிப்பதற்கு வாடகை வண்டிகள், முச்சக்கர வண்டிகள் போன்றவற்றிற்குப் பணத்தைக் கொடுத்து உரிய கரும பீடங்களில் அவர்களின் ஆவணங்களைக் கையளிக்கும் போது அவற்றில் பல குறைபாடுகளை அமைச்சு மட்ட அதிகாரிகள் இனங்காண்பதால் உரிய சேவைகள் கிடைக்காது அவர்கள் மீளத்திரும்பி வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின்றனர். இந்த விடயம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராலும் அமைச்சில் கடமையாற்றுகின்ற உயர்மட்ட அதிகாரிகளாலும் அடையாளம் காணப்பட்டிருக்கும் காரணத்தினால், இவ்வாறான ஒரு நடமாடும் சேவை இன்று இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.